January 15, 2026

ஈரானில் வெடித்துள்ள மக்கள் புரட்சி: அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை – உயிரிழப்பு 530-ஐ கடந்தது

தெஹ்ரான், ஜனவரி 11, 2026: ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு நிலவும் சூழல் சர்வதேச அளவில் பெரும் போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்கள் மீதான அரசின் அடக்குமுறையில் இதுவரை 538-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாகத் தொடங்கிய போராட்டம், தற்போது இஸ்லாமியக் குடியரசு ஆட்சிக்கு எதிரான முழுமையான புரட்சியாக உருவெடுத்துள்ளது. இணையச் சேவைகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் வீதிகளில் இறங்கித் தொடர்ந்து போராடி வருகின்றனர்.போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளைக் கையாண்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏதேனும் இராணுவ நடவடிக்கை எடுத்தால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவை தங்களின் “சட்டபூர்வமான இலக்குகளாக” மாறும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் இன்று எச்சரித்துள்ளார். “அமெரிக்கா ஏதேனும் தவறான முடிவை எடுத்தால், எங்களது பதில் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும்,” என அவர் ஈரானிய நாடாளுமன்றத்தில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானியப் போராட்டக்காரர்களுக்குத் தனது ஆதரவைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். “ஈரான் மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது,” என அவர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் வன்முறையைத் தூண்டிவிடுவதாகவும், கலவரக்காரர்களை இயக்குவதாகவும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானிய மக்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ள அதேவேளை, அங்கு நடைபெறும் நிகழ்வுகளை இஸ்ரேல் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஈரானிய அரசு சொந்த மக்கள் மீதான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மக்களின் அமைதியாகப் போராடும் உரிமையை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரானின் இந்த உள்நாட்டுப் போர்ச்சூழல் வளைகுடா பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒருவேளை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் இராணுவ ரீதியாகத் தலையிட்டால், அது ஒரு முழுமையான பிராந்தியப் போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த பூகோள அரசியல் மாற்றம் காரணமாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால், உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

மேலதிக செய்திகள்