அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி உடன்பாடு எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தற்போது உக்ரைனை போர்க்களத்தில் கடுமையாக தாக்கி வருகிறது என்றும் இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் இதற்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை புகழ்ந்து பேசியிருந்தார். உக்ரைன் தலைவர்தான் ரஷ்யாவுடன் அமைதிக்கு விரும்பவில்லை என்று பொய்யான குற்றத்தினை சுமத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அவருடைய கருத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைனுடன் உறவை கையாள்வது கடினமாக இருக்கிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் மீண்டும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்;ளைமாளிகை அலுவலகத்தில் கடுமையாக விமர்சித்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்ததோடு, உக்ரைன்தான் போரை ஆரம்பித்தது என்றும் குற்றம் சாட்டினார். உக்ரைன் போர் பிப்ரவரி 24, 2022 அன்று புடினால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கி வந்த இராணுவ உதவி மற்றும் உளவுத் தகவல்களை நிறுத்தி வைத்துள்ளது. இது ரஷ்யா, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து பெரிய அளவிலான ஏவுகணை மற்றும ட்ரோன்; தாக்குதல் நடத்த காரணமாக அமைந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை காலை, டிரம்ப் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். ரஷ்யா, உக்ரைனை கடுமையாக தாக்கி வருகிறது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் தெரிவித்தார்.
உக்ரைனுடனான இராணுவ ஒத்துழைப்பை அமெரிக்கா நிறுத்தியதால்தான் புடின் இவ்வாறு செயல்படுகிறாரா என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள் என்று டிரம்ப் பதிலளித்தார். மேலும் உக்ரைன் சமாதானத்திற்கு தயாராக இருக்கிறதா என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஆனால் அவர்கள் தயாராக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய அவரது றுத் வலைத்தளத்தில் பதிவு செய்த கருத்தில், டிரம்ப், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி உடன்பாடு எட்டப்படும் வரை ரஷ்யா மீது பாரிய அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள், தாமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
இந்த பொருளாதாரத் தடைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து எந்த தகவலும் அவர் வெளியிடவில்லை.
ரஷ்யா ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறிவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எண்ணெயை விற்பனை செய்து, கஜகஸ்தான் போன்ற நாடுகள் மூலம் மேற்கு நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து தடைகளை சமாளித்து வருகிறது.
சீனா, ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வழங்கி உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனா இதனை மறுத்துள்ளது.
அமைதி உடன்படிக்கைக்கான அழுத்தம் உக்ரைன் மீது மட்டுமே செலுத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. டிரம்ப்பின் இந்த அச்சுறுத்தல் ஒரு சமநிலையை காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம்.
டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் ரஷ்ய அதிபருடன் 90 நிமிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்திருந்தார். அந்த தொலைபேசி உரையாடலில் என்ன விவாதிக்கப்பட்டது, என்ன உடன்பாடுகள் எட்டப்பட்டன என்பது இதுவரை வெளிவரவில்லை.
தற்போதைய சூழலில் விளாடிமிர் புடின் ஒரு புத்திசாலியான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். டிரம்பின் இந்த பொருளாதாரத் தடை அச்சுறுத்தல் புடினுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.









