லண்டன், ஒன்ராறியோ – பெப்ரவரி 07, 2026: கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் (Western University) தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உட்பட நால்வர், வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தற்போது கனடிய அரச பொலிஸாரின் (RCMP) தேசிய பாதுகாப்புக்கான விசேட பிரிவு (INSET) பொறுப்பேற்று விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்தச் சம்பவம் கடந்த ஜனவரி 24ஆம் திகதி அதிகாலை 1:40 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியுள்ளது. பொறியியல் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற சந்தேகநபர் ஒருவரைப் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டிப் பிடித்தபோது, அவரிடமிருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து லண்டன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள Chesham Place பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
குறித்த வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார், அங்கு வெடிகுண்டுகளைத் தயாரிக்கக் கூடிய உயர் ஆற்றல் கொண்ட இரசாயனப் பொருட்கள் (Precursor substances) மற்றும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் சிலவற்றையும் மீட்டுள்ளனர். இதன் விளைவாக, அந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் பல நாட்களுக்குப் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் ஜெரி டோங் (Jerry Tong, 27), செகுன் வாங் (Zekun Wang, 26), பேய் “பிராங்க்” ஹான் (Fei Han, 25) மற்றும் பியாங் “அஸ்ட்ரிட்” ஜி (Feiyang Ji, 21) ஆகிய நால்வர் அடங்குவர். இதில் மூவர் பொறியியல் பட்டதாரிகள் என்பதும், ஒருவர் தற்போதைய விஞ்ஞானத் துறை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வெடிபொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்தமை, உரிமம் இன்றி ஆயுதங்களைத் தயாரித்தமை மற்றும் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கிகளைச் சேமித்து வைத்திருந்தமை என இருபதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இவர்கள் ஒரு துப்பாக்கியை சுயமாகத் தயாரித்ததாகவும் (Manufacturing a firearm) நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது பின்னணி குறித்து ஆராய்ந்தபோது, இவர்கள் மூவர் இணைந்து ‘MORSLAB’ என்ற பெயரில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதத் தொழில்நுட்பத்தை (Anti-drone weapon system) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததும், அதற்காக யூடியூப் (YouTube) தளம் வாயிலாக நிதி திரட்ட முயன்றதும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் தீவிரம் கருதி, ஒட்டாவா (Ottawa) மற்றும் கியூபெக்கின் (Quebec) காட்டினோ (Gatineau) ஆகிய நகரங்களிலும் தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டுள்ளன. இவர்களது நோக்கம் பயங்கரவாதச் செயலாக இருக்கலாம் அல்லது ட்ரோன் தொழில்நுட்பம் சார்ந்த தனிப்பட்ட ஆராய்ச்சியாக இருக்கலாம் என்ற கோணங்களில் விசாரணைகள் நடைபெறுகின்றன. எவ்வாறாயினும், ஒரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கியவாறு நுழைய முயன்றதும், மக்கள் குடியிருப்புப் பகுதியில் வெடிபொருட்களைச் சேமித்து வைத்திருந்ததும் பாரிய குற்றமாகவே கருதப்படுவதாக லண்டன் பொலிஸ் துணைத் தலைவர் போல் பாஸ்டியன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இச்சம்பவம் குறித்து மாணவர்களுக்குத் தகவல் வழங்கப்பட்ட விதம் குறித்துப் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது வரை கைதான நால்வரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மே மாதம் 27ஆம் திகதி வரை இவர்களது வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்களது உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.









