January 15, 2026

2026 இல் சொத்து வரி உயர்வு வெறும் 2.2% மட்டுமே! டொரோண்டோ வீட்டு உரிமையாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு

டொரோண்டோ: கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான சொத்து வரி (Property Tax) உயர்வைச் சந்தித்து வந்த டொரோண்டோ வீட்டு உரிமையாளர்களுக்கு, இம்முறை சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியை நகர சபை வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான டொரோண்டோ மாநகர பட்ஜெட்டில், சொத்து வரியை வெறும் 2.2% மட்டுமே உயர்த்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜனவரி 7) மேயர் ஒலிவியா சாவ் (Olivia Chow) அவர்களின் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய வரி உயர்வு பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:

  • குடியிருப்புச் சொத்து வரி உயர்வு: 0.7%
  • நகர கட்டுமான நிதி (City Building Fund): 1.5%
  • மொத்த உயர்வு: 2.2%

கடந்த காலங்களுடன் ஓர் ஒப்பீடு: 

இது 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்ட மிகக் குறைந்த வரி உயர்வாகும். மேயர் ஒலிவியா சாவ் பதவியேற்ற பிறகு, நகரத்தின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க 2024 இல் 9.5% மற்றும் 2025 இல் 6.9% எனப் பாரிய அளவில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டன. ஆனால், இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள 2.2% உயர்வு, பணவீக்கத்தை விடக் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

காரணங்கள் மற்றும் அரசியல் பின்னணி:

 இந்தத் திடீர் குறைப்பிற்கு முக்கியக் காரணமாக 2026 அக்டோபரில் நடைபெறவுள்ள மாநகர சபைத் தேர்தல் பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆண்டில் மக்கள் மீது அதிக வரிச்சுமையைச் சுமத்துவது அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, இந்த பட்ஜெட் மிகவும் சிக்கனமானதாக (“Leaner Budget”) வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேயர் ஒலிவியா சாவ் இது பற்றிக் குறிப்பிடுகையில், “டொரோண்டோ குடும்பங்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவும், அதேவேளை அத்தியாவசிய சேவைகளைப் பாதுகாக்கவும் இந்த பட்ஜெட் வழிவகுக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

சொகுசு வீடுகளுக்கான வரி (Luxury Home Tax): 

பொதுவான சொத்து வரி குறைவாக இருந்தாலும், நகரத்தின் வருவாயை ஈடுகட்ட $3 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகளை வாங்குபவர்களுக்கு “நிலப் பரிமாற்ற வரி” (Land Transfer Tax) அதிகரிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்களிடமிருந்து கூடுதல் வரியை வசூலித்து, நடுத்தர மக்களின் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று மாநகர சபை விளக்கியுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) காலை இந்த பட்ஜெட் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன.

மேலதிக செய்திகள்