குறுஞ்செய்தி

  • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

    முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதற்காக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றவர் கைது

    களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

    திருடப்பட்டதாக கூறப்படும் தங்கச் சங்கிலியின் பெறுமதி 119,000 ரூபா ஆகும்.

    இது தொடர்பில் தெரியவருவதாவது, 

    சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் சிறுமியும் சிறுமியின் பாட்டியும் வீட்டில் தனிமையிலிருந்துள்ளனர்.

    இதன்போது, சிறுமியின் பாட்டி துணிகளைத் துவைத்து விட்டு அதனைக் காய வைப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.

    சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாததை அவதானித்த சந்தேக நபர், வீட்டிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    இனங்காணாத நபரொருவர் வீட்டிலிருந்து வெளியே செல்வதைக் கண்ட பாட்டி உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிறுமி அலறிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.

    பின்னர், சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளதை அவதானித்த பாட்டி இது தொடர்பில் சிறுமியின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • மாத்தறையில் மண்சரிவு; 10 வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கிய பாடசாலை

    மாத்தறையில் மண்சரிவு அபாயம் காரணமாக  பாடசாலை ஒன்றின் 10 வகுப்பு மாணவர்களுக்கு வியாழக்கிழமை (24) விடுமுறை வழங்க பாடசாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

    இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தில் 06 ஆம் தரம் மற்றும் 08 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சகல சிறார்களுக்கும் வியாழக்கிழமை (24 ஆம் திகதி) பாடசாலை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் 06 மற்றும் 08 தரம் இயங்கும் இரண்டு மாடிக் கட்டிடத்தின் பின்புறம் உள்ள மண்மேட்டில் சற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி, பெய்த கனமழையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஏழாலையில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

    யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்ததுடன், இளைஞனிடம் இருந்து 840 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர். 

    கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞன் ஏற்கனவே போதை மாத்திரைகளுடன் கைதாகி அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

    அதேவேளை செவ்வாய்க்கிழமை (22) மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 1400 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.