வாஷிங்டன்/ஒட்டாவா, ஜனவரி 24, 2026: கனடா தனது விவசாயப் பொருட்களைக் காப்பாற்ற சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100% வரி (Tariff) விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின்னால் அமெரிக்காவின் அப்பட்டமான “இரட்டை வேடம்” இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மும்முனைத் தாக்குதல்: டிரம்பின் திடீர் குத்துக்கரணம்
கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங் முன்னிலையில் ஒரு முதற்கட்ட வர்த்தகப் புரிந்துணர்வை ஏற்படுத்தினார். இதன்படி, கனடாவின் கனோலா (Canola) எண்ணெய் மற்றும் இறைச்சிப் பொருட்களுக்கு சீனா வரிச் சலுகை அளிக்கும்; பதிலுக்கு சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்களை (EVs) குறைந்த வரியுடன் கனடா அனுமதிக்கும்.வியக்கத்தக்க வகையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தான ஆரம்பத்தில், “இது ஒரு நல்ல விஷயம். கார்னி அதைத்தான் செய்ய வேண்டும். சீனாவுடன் ஒப்பந்தம் போட முடிந்தால் தாராளமாகப் போடலாம்,” என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாகப் பாராட்டியிருந்தார். ஆனால், தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, கனடியப் பிரதமரை “கவர்னர் கார்னி” என்று ஏளனம் செய்வதோடு, கனடாவை சீனா “விழுங்கிவிடும்” (China will eat Canada alive) என்று கூறி 100% வரி விதிப்பதாக மிரட்டுவது அவரது நிலையற்ற தன்மையைக் காட்டுகிறது.
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு: சிப் (Chip) ஏற்றுமதி விவகாரம்
கனடாவைச் சீனாவுடன் உறவு வைப்பதாகக் குற்றம் சாட்டும் அதேவேளையில், அமெரிக்காவும் சீனாவுடன் அமைதியாகத் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் டிரம்ப் நிர்வாகம், சீனாவின் குறைக்கடத்தி (Semiconductor) துறை சார்ந்த ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. “தேசியப் பாதுகாப்பு” என்ற போர்வையில் கனடாவின் விவசாய ஏற்றுமதியைத் தடுக்கும் அமெரிக்கா, தனது சொந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க சீனாவுடன் ‘சிப்’ (Chip) ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் சத்தமில்லாமல் முன்னெடுத்துள்ளது. இது “தனக்கு வந்தால் இரத்தம், பிறருக்கு வந்தால் தக்காளி சட்னி” என்ற ரீதியிலான வர்த்தக அராஜகம் என விமர்சகர்கள் சாடுகின்றனர்.
கிரீன்லாந்து மற்றும் ‘கோல்டன் டோம்’ அரசியல்
இந்த வர்த்தகப் போருக்குப் பின்னால் ஒரு பெரிய பனிப்போர் அரசியலும் உள்ளது. அமெரிக்கா, டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்கவும், அங்கு ‘கோல்டன் டோம்’ (Golden Dome) எனப்படும் ஏவுகணைப் பாதுகாப்புத் தளத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. கனடா இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்காதது டிரம்பின் கோபத்தை அதிகரித்துள்ளது. கனடாவின் எதிர்ப்பைச் சமாளிக்கவே, வர்த்தக ரீதியாக நெருக்குதல் கொடுத்து கனடாவை வழிக்குக் கொண்டுவர டிரம்ப் முயல்வதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே, டிரம்ப் அமைத்துள்ள உலகளாவிய ‘அமைதிக் குழுவிலிருந்து’ (Board of Peace) கனடாவுக்கான அழைப்பைத் திரும்பப் பெற்றுள்ளார்.

கியூபெக் கூட்டத்தில் பிரதமர் கார்னியின் பதில்
அதிபர் டிரம்பின் இந்த மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கியூபெக் (Quebec) மாகாணத்தில் நடைபெற்ற லிபரல் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் (Liberal Caucus Retreat) பேசிய பிரதமர் மார்க் கார்னி, மிகவும் காட்டமான கருத்தை முன்வைத்தார். “கனடா அமெரிக்காவால் உயிர்வாழவில்லை; அது கனடியர்களின் சுய மரியாதையால் இயங்குகிறது,” என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார். அமெரிக்கா தனது ஆதிக்கத்தை மட்டுமே நிலைநாட்டப் பார்க்கும் வேளையில், கனடா தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க மாற்றுச் சந்தைகளை (Alternative Markets) நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதையும் அவர் அந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்.









