January 15, 2026

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் அபாயம் – பிரதமருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம்

சென்னை, ஜனவரி 12, 2026: இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அங்கு வாழும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கவலை தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் இது ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் தனது கடிதத்தில், இலங்கை ஜனாதிபதி அனுர குுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், உத்தேச அரசியலமைப்பு வரைபு மீண்டும் ஒரு “ஒற்றையாட்சி” (Unitary State – ‘ஏக்கியராஜ்ய’) முறையை வலுப்படுத்துவதாகவும், இது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகவும் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

“இலங்கையின் உத்தேச புதிய அரசியலமைப்பானது, அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் 13-வது திருத்தச் சட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் அபாயம் உள்ளது. இது தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் நிலைக்குத் தள்ளும். எனவே, இந்தியா உடனடியாக இராஜதந்திர ரீதியில் தலையிட்டு, தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்,” என்று மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 1985-ம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட ‘திம்பு கோட்பாடுகள்’ (Thimphu Principles) அடிப்படையில் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு-கிழக்கு மாகாணங்களைத் தமிழர்களின் பாரம்பரிய தாயகமாக அங்கீகரித்தல், தமிழர்களை ஒரு தனித் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி (Federal) முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நலன் காப்பதில் இந்தியாவுக்கு தார்மீகப் பொறுப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக முதல்வர், “வெறும் பொருளாதார உதவிகளோடு நின்றுவிடாமல், இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுவதை உறுதி செய்யப் பிரதமர் மோடி அவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்,” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் இந்தக் கடிதத்தில் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலதிக செய்திகள்