ஜனவரி 19, 2026: இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, தற்போது நடைமுறையிலுள்ள அடக்குமுறை சட்டத்தைப் போன்றே பல மோசமான பிரிவுகளைக் கொண்டுள்ளதாக Human Rights Watch அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. “அரச பாதுகாப்பிற்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” (Protection of the State from Terrorism Act – PSTA) என்ற பெயரில் 2025 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு, தன்னிச்சையான கைதுகள் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) மறுவடிவமாகவே இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Human Rights Watch அமைப்பின் ஆசிய பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி (Meenakshi Ganguly) இது குறித்துத் தெரிவிக்கையில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதைத் தாண்டி, அரசாங்கம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கே இத்தகைய சட்டங்கள் வழிவகுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்லுகையைப் பெறுவதற்காக இலங்கை வழங்கிய மனித உரிமை வாக்குறுதிகளை இந்த புதிய சட்டமூலம் மீறுவதாகவும், இது சர்வதேச தரங்களுக்கு எவ்விதத்திலும் பொருந்தவில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பழைய சட்டத்தின் அதே கொடூரமான அதிகாரங்களை மீண்டும் ஒரு புதிய பெயரில் கொண்டு வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, இராணுவத்தினருக்கு பிடியாணை இன்றி சோதனை நடத்தும் அதிகாரம் மற்றும் ஒரு வருட காலம் வரை ஒருவரைத் தடுப்புக்காவலில் வைக்கும் அதிகாரம் போன்றவை இதில் உள்ளடங்கியுள்ளன.
இந்தச் சட்டமூலத்தின் கீழ் பயங்கரவாதம் என்பதற்கான வரையறை மிகவும் விரிவாகவும் தெளிவற்றதாகவும் உள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களைக் குறிவைக்கப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த காலங்களில் இத்தகைய சட்டங்கள் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில், புதிய சட்டமும் அதே பாதையில் பயணிப்பது புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசாங்கம் தகவல் அளித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் மொத்த கைதுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளைத் தடுப்பதற்கும், சிவில் சமூகச் செயல்பாடுகளை முடக்குவதற்கும் இச்சட்டம் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகமனித உரிமைகள் கண்காணிப்பக அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது.
புதிய சட்டமூலத்தின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் ஒருவரை ஓராண்டு வரை நீதிமன்றப் பிணையின்றித் தடுப்புக்காவலில் வைக்க முடியும். மேலும், எவ்வித பிடியாணையும் இன்றி ஒருவரின் இல்லங்களுக்குள் நுழைந்து சோதனையிடவும், ஆவணங்களைக் கைப்பற்றவும் பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, சித்திரவதைகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த அறிக்கையின் முடிவில், சர்வதேச சமூகமும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை அவரது வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடக்குமுறைச் சட்டங்களை மறுவடிவம் செய்வதை விடுத்து, அவற்றை முழுமையாக நீக்கி, சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு உட்பட்ட ஒரு புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை Human Rights Watch வலியுறுத்தியுள்ளது.









