வவுனியா | 15 பெப்ரவரி 2026: வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரி வழிபாடுகள் இம்முறை எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்யவும், தமிழர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டவும் சைவப் பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக அணிதிரள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அறைகூவல் விடுத்துள்ளார். கடந்த காலங்களில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைகளை முறியடித்து, எமது பாரம்பரிய நிலத்தில் சிவனை வழிபட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு மகா சிவராத்திரி வழிபாட்டின் போது, இலங்கை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட அத்துமீறல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நீங்காத வடுவை ஏற்படுத்தியுள்ளன. அன்று இரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயப் பூசகர் உள்ளிட்ட எட்டுப் பேரை பொலிஸார் மிகக் கொடூரமான முறையில் கைது செய்ததுடன், அவர்களது ஆடைகளைக் களைந்து அவமதித்தமை மற்றும் பூசைப் பொருட்களைக் காலணிகளுடன் மிதித்துத் துவம்சம் செய்தமை போன்ற செயல்கள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகின. இந்த கசப்பான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க மக்களின் பலம் அவசியமானது என ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெடுக்குநாறி மலை விவகாரமானது வெறுமனே ஒரு மத வழிபாட்டுத் தலம் சார்ந்தது மட்டுமல்ல, அது ஈழத் தமிழர்களின் பூர்வீக நில அடையாளத்தை அழித்து ‘சிங்கள – பௌத்த’ மயமாக்கலை முன்னெடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. தொல்பொருள் திணைக்களம் இந்த இடத்தைத் தனது ஆளுகைக்கு உட்பட்டது எனக் கூறி வழிபாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், நீதிமன்றத் தீர்ப்புகள் வழிபாட்டு உரிமையை அங்கீகரித்துள்ள போதிலும், பொலிஸாரின் அடாவடித்தனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த 2025ஆம் ஆண்டு சிவராத்திரி வழிபாடுகளின் போது, பொலிஸாரின் கடும் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆலய நிர்வாகம் மாலை 6 மணிக்குப் பின்னர் வழிபாடுகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இரவு முழுதும் கண் விழித்து சிவனை வழிபட வேண்டிய சிவராத்திரி தினத்தில் கூட, பக்தர்கள் மலையிலிருந்து இறக்கப்பட்டு பொலிஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டமை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய அடக்குமுறைகளைத் தகர்க்க வேண்டுமானால், இம்முறை மக்கள் அதிக அளவில் அங்கு வர வேண்டும் என ரவிகரன் கோரியுள்ளார்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் குறித்து ஆலய நிர்வாகத்தினருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ரவிகரன், எத்தகைய தடைகள் வரினும் எமது இறை உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். வவுனியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மட்டுமன்றி, வடக்கு – கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சிவனடியார்கள் வெடுக்குநாறி மலைக்கு வந்து தங்களது ஆன்மீகப் பலத்தைக் காட்ட வேண்டும் என்பதே ரவிகரனின் இன்றைய பிரதான அழைப்பாக உள்ளது.









