January 15, 2026

வேண்டுமென்றே எனது பதவி உயர்வு நிராகரிப்பு – நீதிபதி இளஞ்செழியன் குற்றச்சாட்டு!

illamcheliyan

லண்டன்: ஓய்வுபெற்ற சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள், தனக்கு வழங்கப்பட வேண்டியிருந்த பதவி உயர்வு வேண்டுமென்றே மறுக்கப்பட்டு, கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்பட்டதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் தனது நீண்டகால சேவையின் நிறைவில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.

நிராகரிக்கப்பட்ட பதவி உயர்வு

நீதிபதி இளஞ்செழியன் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் உயர் நீதிமன்றங்களில் நான்கு வெற்றிடங்கள்ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் அவரே மிகவும் சிரேஷ்டமானவராக இருந்தார். 61 வயது நிறைவடைவதற்குள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட விதி இருந்தபோதிலும், அவர் ஓய்வு பெற எட்டு நாட்களே இருந்த நிலையில், அவருக்குரிய நியமனம் வழங்கப்படவில்லை.

“எனக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால், நான் இன்னும் நான்கு ஆண்டுகள் சேவையில் இருந்திருப்பேன். இரண்டு ஆண்டுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், இரண்டு ஆண்டுகள் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றியிருப்பேன்,” என்று அவர் வேதனையுடன் கூறினார்.

ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து நான்கு நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திற்கு நியமனம் பெற்றனர். ஆனால், ஜனவரி 20ஆம் திகதி தன் 61வது பிறந்தநாளில், தனக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நான்கு கடிதங்கள் – பதில் இல்லை

தனது கட்டாய ஓய்வு குறித்துத் தெளிவுபடுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான்கு கடிதங்களைஅனுப்பியபோதும், அவை எதற்கும் பதில் கிடைக்கவில்லை என்று நீதிபதி இளஞ்செழியன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிரேஷ்ட நீதிபதியாக இருந்தும் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் உரிமை தனக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

அவர் இதற்கு முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக, ஜனாதிபதியைச் சந்தித்து, 90 நீதிபதிகளில் முதலாவதாகத் தனது நியமனத்தை நினைவுபடுத்தியதாகவும், ஜனாதிபதி அன்று அவருடன் மகிழ்ச்சியுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் நினைவு கூர்ந்தார்.


‘நீதிக்கு மட்டுமே தலைவணங்குவேன்’

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக யார் மீதும் குறை கூற விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி இளஞ்செழியன், தாம் நீதித்துறையின் புனிதத்தைக் காப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அறிவித்தார்.

“நான் விரும்பி ஓய்வு பெறவில்லை. கட்டாயப்படுத்தி ஓய்வில் அனுப்பப்பட்டேன். எனது விடயத்தில் எங்கு தவறு இடம் பெற்றது? அந்தத் தவறு ஏன் நிவர்த்தி செய்யப்படவில்லை?”

“நான் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கு விடயங்களுக்கு மாத்திரமே தலை குனிந்தேன். வேறு எதற்கும் நான் தலைகுனியவில்லை. சட்ட ரீதியாக எனக்குக் கிடைக்க வேண்டிய உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எனது நீதித்துறை புனிதமானது,” என்றும் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

மேலதிக செய்திகள்