சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்த ‘தலைவர் 173’ குறித்த பரபரப்பான அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே, எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்கவிருந்த இயக்குநர் சுந்தர். சி அவர்கள், திடீரென இந்தப் பிரம்மாண்ட திட்டத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியையும், கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர். சி-யின் நெகிழ்ச்சியான விலகல்:
இயக்குநர் சுந்தர். சி வெளியிட்ட அறிக்கையில், “தவிர்க்க முடியாத மற்றும் தவிர்க்க இயலாத சில காரணங்களால், மதிப்புமிக்க ‘தலைவர் 173’ திட்டத்திலிருந்து விலகும் கடினமான முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளேன். ரஜினிகாந்த் சார் நடிப்பில், கமல்ஹாசன் சார் தயாரிப்பில் ஒரு படம் இயக்குவது என்னுடைய சினிமா கனவாக இருந்தது. இருப்பினும், என் வாழ்வில் நாம் விரும்பாத பாதையை சில நேரங்களில் பின்பற்ற வேண்டிய கட்டாயங்கள் ஏற்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய இரண்டு ஜாம்பவான்களுக்கும் அவர் தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
விலகலுக்கான பின்னணி என்ன?
சுந்தர். சி-யின் இந்த திடீர் விலகலுக்குப் பின்னால் ‘கதை மற்றும் கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகளே’ முக்கியக் காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- சுந்தர். சி ஒரு லைட் ஹார்டட் (Light-Hearted) மற்றும் ஜாலியான கதையை (Joly light hearted story) ரஜினிகாந்திடம் கூறியதாகவும், அதில் ரஜினிகாந்த் சில மாஸ் எலிமெண்ட்ஸ் (Mass Elements) மற்றும் பெரிய மாற்றங்களைக் கோரியதாகவும் கூறப்படுகிறது.
- இந்த மாற்றங்கள் சுந்தர். சி-யின் கதை பாணியிலிருந்து மாறுபட்டதாக இருந்ததால், அவர் இந்தக் கோரிக்கைகளுக்கு உடன்பட விரும்பவில்லை எனவும், இதுவே விலகலுக்குக் காரணம் எனவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
- இந்தப் பிரச்சனை ஏற்பட்டபோது தயாரிப்பாளரான கமல்ஹாசன் தலையிட்டுச் சமரசம் செய்ய முயன்றதாகவும், ஆனால் இறுதியில் சுந்தர். சி தனது முடிவில் உறுதியாக இருந்ததால் விலகியதாகவும் தெரிகிறது.
கமல்ஹாசனின் நிலைப்பாடு:
இந்த திடீர் திருப்பம் குறித்து கமல்ஹாசன் பேசியபோது, “சுந்தர் சி தனது முடிவை அறிக்கை மூலம் கூறிவிட்டார். ஆனால் நான் இந்த படத்தின் முதலீட்டாளர் என்ற முறையில், என்னுடைய நட்சத்திரமான ரஜினிகாந்துக்குப் பிடித்த கதையைத்தான் நான் எடுக்க வேண்டும். அவருக்கு திருப்தி அளிக்கும் வரை நாங்கள் புதிய கதை மற்றும் இயக்குநரைத் தேடிக்கொண்டே இருப்போம்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இது, நட்சத்திரத்தின் திருப்தியே படத்திற்கு முக்கியம் என்ற அவருடைய நிலைப்பாட்டைத் தெளிவாகக் காட்டுகிறது.
அடுத்த இயக்குநர் யார்? எதிர்பார்ப்புகள்!
சுந்தர். சி விலகியதைத் தொடர்ந்து, ‘தலைவர் 173’ படத்திற்கு அடுத்த இயக்குநரைத் தேடும் பணி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. தற்போது சில முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் அடிபடுகின்றன:
- கார்த்திக் சுப்பராஜ்: ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியால், இவரது பெயர் மீண்டும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- வெங்கட் பிரபு: மாஸ் மற்றும் கமர்ஷியல் படங்களை எடுப்பதில் திறமையான இவரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது.
- தனுஷ்: சில தகவல்களின்படி, இயக்குநர் தனுஷிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், ரஜினியின் மாஸ் இமேஜுடன் அவரது புத்துணர்ச்சியூட்டும் கதைக்களம் இணைந்தால் படம் வேறு தளத்தில் இருக்கும் என்றும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துவதால், ‘தலைவர் 173’ படத்தின் புதிய இயக்குநர் மற்றும் இறுதி செய்யப்பட்ட கதை வடிவம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.









