பிராம்ப்டன், கனடா: கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown), நவம்பர் 21-ம் தேதியை பிராம்ப்டன் நகரில் “தமிழீழ தேசிய கொடி நாளாக” (Tamil Eelam National Flag Day) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான சிறப்பு விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வு அண்மையில் பிராம்ப்டன் நகரசபை வளாகத்தில் (City Hall) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான கனடியத் தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும், நகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய அம்சமாக, மேயர் பேட்ரிக் பிரவுன் முன்னிலையில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
விழாவில் மேயர் பேட்ரிக் பிரவுன் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் “இந்தக் கொடி தமிழர்களின் மனவுறுதிக்கும், நெஞ்சுரத்திற்கும், விடுதலை வேட்கைக்கும் ஒரு அடையாளமாகும். எத்தகைய அடக்குமுறைகளையும் தாண்டி தமிழ்ச் சமூகம் தனது அடையாளத்தை காத்து நிற்பதை இது பறைசாற்றுகிறது” என்று மேயர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை கனடா ஒருபோதும் மறக்காது என்றும், நீதிக்கான தமிழர்களின் போராட்டத்திற்கு பிராம்ப்டன் நகரம் தொடர்ந்து துணையாக இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
கனடாவின் வளர்சிக், குறிப்பாக பிராம்ப்டன் நகரத்தின் முன்னேற்றத்தில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது என மேயர் புகழாரம் சூட்டினார்.
பிராம்ப்டன் நகரில் ஆண்டுதோறும் மாவீரர் வாரத்தின் தொடக்கத்தில் இந்த கொடியேற்ற நிகழ்வு நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் தாயக விடுதலைக் கனவை நினைவுகூரும் வகையிலும், தமிழின படுகொலைக்கு நீதி கோரும் வகையிலும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு, கனடியத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பையும், உணெழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.









