ரணில் விக்கிரமசிங்கவால் எல்போர்ட் அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு டித்வா புயல் ஒரு சோதனையாக வந்தி ருக்கிறது. கடந்த 14 மாதங்களாக தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த எதிர்க் கட்சிகள் நுகேகொடவில் ஒர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தி மெல்லத் தலைதூக்க முயற்சித்தன. அந்தப் பேரணி திறந்து விட்ட வாய்ப்புகளை விட அதிக வாய்ப்புகளை டித்வா புயல் எதிர்க்கட்சிகளுக்கு திறந்து விட்டிருக்கிறது. இது ஒரு எல்போர்ட் அரசாங்கம் என்று நிரூபிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
முதலாவது குற்றச்சாட்டு அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு நடக்கவில்லை என்பது. இதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தொடர்பாக நவம்பர் 13 ஆம் திகதியே எச்சரித்திருந்தது. நவம்பர் 26வரை அனைத்துத் தகவல்களும் இலங்கையுடன் பரிமாறப்பட்டுள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் கூறுகிறது. மேலும் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவராகிய பேராசிரியர் பிரதீபராஜா நவம்பர் மாதக் கடைசியில் வரக் கூடிய புயலைக் குறித்து முன்னெச்சரிக்கை விடுத்திருந்தார். அவரைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன்னுடைய YouTube தளத்தில் புயலின் வருகையைக் குறித்து எச்சரித்திருந்தார்.
ஆனால் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்களோ ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? புயல் நாட் டைத் தாக்கப் போகிறது என்பதனை வளிமண்டலவியல் திணைக்களம் உரிய நேரத்தில்,உரிய வேகத்தில் எச்சரித்திருக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
இரண்டாவது குற்றச்சாட்டு, அரசு திணைக்களங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்பது. பாதிக்கப்பட்ட மக்களும் அதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இந்த விடயத்தில் முழு அளவுக்கு ஒருங்கிணைப்போடு செயற்பட்டு இருந்திருந்தால் இழப்பின் அளவைக் குறைத்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக வளிமண்டலவியல் திணைக் களம், நீர்பாசனத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவத் நிலையம் போன்றன இந்த விடயத்தில் மக்களை எச்சரிக்கத் தவறி விட்டதாகவும், தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்போடு செயல்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரட்ன, ரவுப் ஹக்கீம் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் வைத்துச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை ஒரே வேளையில் திறக்கப்பட்டதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கைக் குறித்து சம்பந்த ப்பட்ட திணைக்களங்கள் மக்களை எச்சரிக்கத் தவறியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விடயத்தில் திணைக்களுங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாதது சேதத்தை அதிகப்படுத்தி இருப்பதனால் வருங்காலத்தில் நதிப்படுக்கைகளுக்கு என்று அதிகார சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை ரவுப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.
மூன்றாவது குற்றச்சாட்டு முன்னெச்ச ரிக்கை உணர்வோடு வருமுன் காக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து இருந்திருந்தால் சேதத்தின் அளவைக் குறைத்திருக்கலாம் என்பது. பருவ மழையின் போது மண் சரிவு ஏற்படும் பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. மழை வீழ்ச்சி அதிகரிக்கும் போது மண் சரிவு அபாயம் உண்டு என்பது சம்பந்தப்பட்ட எல்லா அரசுக்கு கட்டமைப்புக்களுக்கும் தெரியும் என்பதால் வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களில் இருந்து மக்களை முன்கூட்டியே இடம் மாற்றி இருந்திருந்தால் சேதத்தின் அளவை குறைத்து இருக்கலாமா என்ற கேள்வி உண்டு.
இந்த விடயத்தில் அரசாங்கம் அனர்த்த காலம் ஒன்றை நோக்கி வினைத்திறனோடு செயல்படவில்லை என்றும் அனர்த்தத்தின் போதும் அதன் பின்னரும் நிலைமைகளைச் சரியாக முகாமை செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, அவை வழமையான எதிர்ப்பு அரசியல் என்ற பெட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட முடியாது. அதே சமயம் நுகேகொட பேரணிக்குப் பின் அரசங்கத்தை விமர்சிப்பதற்கு கிடைத்த அதிகரித்த வாய்ப்பாக புயலுக்கு பின்னரான அரசியற் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பதும் உண்மை.
எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் வானிலை மாற்றங்களை மிகத் துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் புத்திஜீவிகள் சமூக வலைத் தளங்களில் எழுதி வருகிறார்கள். தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இயற்கை அனர்த் தங்களைக் குறித்து மிகச் சரியாகக் கணிக்க முடிவதில்லை என்றும் அவ்வாறு கணிப்பிட்டு இருந்தாலும் அழிவுகளை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதில் உண்மை உண்டு.
ஆனால் இந்திய வானிலை அவதானிப்பு மையம் உரிய காலத்தில் எச்சரித்திருந்த போதிலும் துறைசார் வல்லுநர்கள் சிலர் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் இது தொடர்பாக எச்சரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங் கள் ஏன் அதனை கவனத்தில் எடுக்கத் தவறின?
இப்பொழுது அழிவு நடந்து விட்டது. இனி இறந்த காலத்தைப் போஸ்ட் மோர்ட்டம் செய்து கொண்டிருப்பதை விடவும் மண்ணில் புதைந்திருப்பவர்களை எப்படி மீட்பது? உடைந்து தொங்கும் பாலங்களை எப்படிச் சீரமைப்பது? சிதைந்து போன வாழ்வை எப்படி மீளக் கட்டியெழுப்புவது? என்பதுதான் முதன்மைச் சவால்.
நாட்டின் முழுக் கவனமும் புயலுக்குப் பின்னரான மனிதாபிமான நிலவரங்களின் மீது குவிந்திருக்கின்றது. நாட்டுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அதிகளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்கின்றன.
தமிழ்ப் பகுதிகளில் உயிர் இழப்பு ஒப்பீட்டளவில் குறைவு. ஆனால் சொத்திழப்பு உண்டு. அடிக்கட்டுமானங்கள் சேதமடைந்து விட்டன. முல்லைத்தீவு மாவட்டம் சில நாட்கள் துண்டிக்கப்பட்டிருந்தது. மன்னாரில் 15000க்கும் குறையாத கால்நடைகள் கொல்லப்பட்டு விட்டன. திருகோணமலையிலும் மலையகத்திலும் கால்நடைகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றன. புயலுக்குப் பின் கிட்டத்தட்ட ஒரு கிழமை கழித்து இக்கட்டுரை எழுதப்படுகையிலும் கூட கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை. இது அனர்த்தத்தின் பாரதூரத் தன்மையைக் காட்டுகின்றது.
அதனால் தான் உலக சமூகம் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கிறது. முதலில் உதவ வந்தது இந்தியா. அதிகம் உதவியதும் இந்தியா. அதைத் தொடர்ந்து பெரும்பாலான அயல்நாடுகளும் உட்பட உலக சமூகம் தாராள மாக உதவி செய்து வருகிறது.
அனர்த்த காலம் இலங்கை மீதான அனுதாபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்த அனுதாபம் ஒரு விதத்தில் அனுர அரசாங்கத்தைப் பலப்படுத்தக் கூடியது. அரசாங்கம் அறிவித்திருக்கும் இழப்பீடுகளின் பருமன் அது மக்களு டைய நம்பிக்கையை வெல்வதற்கு முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகின்றது. இதற்கு முன்பு ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது முன்னிருந்த அரசாங்கங்கள் அறிவித்திராத பெருந்தொகை இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
இது வெறும் வாக்குறுதி தான் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நடைமுறையில் அரசாங்கம் எவ்வளவு தொகையைக் கொடுக்கப்போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் அறிவிக்க ப்பட்டிருக்கும் இழப்பீட்டுத் தொகை ஒப்பீட்டளவில் பெரியது.
மேலும் சிதைந்த நகரங்களையும் வாழ் வையும் மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் அரச நிறுவனங்களோடு பொது மக்களும் தன்னார்வமாக இணைந்து வருகிறார்கள். பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்த மக்கள், அல்லது ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படாத பகுதியைச் சேர்ந்தவர்கள், தாங்களாகத் திரண்டு தன்னார்வமாக முன்வந்து, ஏனைய பகுதிகளுக்கு உதவுகிறார்கள். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் உதவுகிறார்கள். சேறு படிந்த தெருக்களை, வீடுகளைக் கழுவிச் சுத்தமாக்குகிறார்கள். பொது மக்கள் மத்தியில் இருந்து நிவாரணங்களைத் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களை நோக்கிக் கொண்டு போகிறார்கள்.
இந்த மனிதாபிமானத் தன்னார்வச் சூழல் அரசாங்கத்துக்கு அனுகூலமானது. குறிப்பாக வடக்கிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் தன்னார்வலர்களும் மலையகத்தை நோக்கி உதவிகளோடு போகிறார்கள். புயல் ஓய்ந்த கையோடு தனித்து விடப்பட்ட அல்லது துண்டி க்கப்பட்ட முல்லைத்தீவை நோக்கி யாழ்ப்பாணத்தில் இருந்து தன்னார்வலர் களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் போனார்கள். தங்களால் இயன்ற நிவாரணங்களைக் கொடுத்தார்கள். உதவி களைச் செய்தார்கள். இப்பொழுது மலையகத்தை நோக்கிப் போகிறார்கள். அனர்த்த காலம் தமிழ் மக்களுக்கு இடையிலான சகோதரத்து வத்தை உணர்வுபூர்வமாகப் பலப்படுத்தியிருக்கிறது – அது மட்டுமல்ல அனுர அரசாங்கத்தையும் அது பலப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாகத் தெரிகின்றன.









