January 15, 2026

சீனா விரித்த வலையில் சிக்கிய இலங்கை – கொந்தளிக்கும் அமெரிக்கா

இலங்கையின் துறைமுகத் திட்டங்களில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் (US Senate) வெளியுறவுக் குழு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இலங்கைக்கு நியமிக்கப்படவுள்ள புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) நியமனத்திற்கான விசாரணையின் போதே, சீனாவிற்கு எதிரான இந்த கடுமையான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் ஜிம் ரிச் (Jim Risch), இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை (Hambantota Port) “உலக நாடுகள் சீனாவுடன் ஏன் வணிகம் செய்யக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை உதாரணம்” (Poster Child) என்று கடுமையாகச் சாடினார். சீனாவின் கடன் பொறியில் (Debt Trap) சிக்கித் தனது இறைமையைத் தாரைவார்க்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சீனா தனது “பட்டுப்பாதை திட்டத்தின்” (Belt and Road Initiative) மூலம் இலங்கையை ஒரு கேந்திர மையமாக மாற்றி வருவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதையே இந்தத் பேச்சுக்கள் உணர்த்துகின்றன.

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், செனட் குழுவின் முன் சாட்சியமளிக்கும் போது, “இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதே தனது முதன்மையான பணி” என்று உறுதி அளித்தார். இலங்கையானது உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ளதால், அப்பிராந்தியத்தின் பாதுகாப்பு அமெரிக்காவிற்கு மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையின் பொருளாதார மீட்சியில் அமெரிக்கா தொடர்ந்து பங்களிக்கும் எனவும், அதேவேளை சீனாவின் “பாதகமான செல்வாக்கை” (Adversarial Influence) முறியடிக்கக் கொழும்புடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை (West Container Terminal) அபிவிருத்தி செய்ய, இந்தியாவின் அதானி குழுமத்துடன் இணைந்து அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) 553 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இது சீனாவிற்கு எதிரான ஒரு நேரடிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளியின் (Cyclone Ditwah) போது அமெரிக்கா வழங்கிய அவசர உதவிகள் மற்றும் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்தும் செனட் விசாரணையில் விவாதிக்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை, இந்த வல்லரசுப் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், குறிப்பாகத் திருகோணமலைத் துறைமுகம் எதிர்காலத்தில் இந்த பூகோள அரசியல் போட்டியில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும். அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் திருகோணமலையில் தமது கடற்படை ஒத்துழைப்பை அதிகரிக்க முயன்று வரும் நிலையில், இது தமிழர் தாயகப் பகுதிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலதிக செய்திகள்