January 15, 2026

இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட முதலாவது ‘பெய்லி பாலம்’ (Bailey Bridge) திறப்பு!

கண்டி/கொழும்பு, ஜனவரி 12, 2026: இலங்கையைச் புரட்டிப்போட்ட ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் துண்டிக்கப்பட்ட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் முழுமையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்ட முதலாவது ‘பெய்லி பாலம்’ (Bailey Bridge) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த 100 அடி நீளமுள்ள பாலத்தை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இலங்கையின் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வித்துறை பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். கண்டி – ரகலை (Kandy-Ragala) வீதியில் அமைந்துள்ள இந்த முக்கிய பாலமானது, மலையகப் பெருந்தோட்டத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணத்தையும், ஊவா மாகாணத்தையும் இணைக்கும் மிக முக்கியமான போக்குவரத்து நாாடியாகும்.

கடந்த 2025 நவம்பர் மாதம் வீசிய ‘டிட்வா’ சூறாவளி ஏற்படுத்திய பேரழிவில் இலங்கையின் உட்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன. இதற்குத் தீர்வாக, இந்தியா அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 350 மில்லியன் கடன் மற்றும் 100 மில்லியன் நன்கொடை) மதிப்பிலான பிரம்மாண்ட மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதல் பாலம் இதுவாகும். இந்திய இராணுவத்தின் 19-வது பொறியாளர் படைப்பிரிவினர் (19 Engineer Regiment), கடினமான மலைப்பாங்கான சூழலிலும் மிகக் குறுகிய காலத்தில் இப்பாலத்தை நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்காக, இந்தியாவின் சி-17 குளோப்மாஸ்டர் (C-17 Globemaster) விமானங்கள் மூலம் சுமார் 228 தொன் எடையுள்ள பாலத்தின் பாகங்கள் அவசரமாகக் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டன. ‘ஆபரேஷன் சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) என்ற பெயரில் இந்தியா முன்னெடுத்துள்ள இந்த நிவாரணப் பணியின் அடுத்த கட்டமாக, வரும் வாரங்களில் மேலும் 15 பெய்லி பாலங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன.

மேலதிக செய்திகள்