ஒட்டாவா, ஜனவரி 25, 2026 – சீனாவுடனான வர்த்தக உறவுகளை ஆழப்படுத்தினால் கனடிய பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) “நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
We’re buying Canadian, and we’re building Canadian. pic.twitter.com/JpKhEFKA2P
— Mark Carney (@MarkJCarney) January 24, 2026
கனடா பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடுகளிலிருந்து நமது பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில், கனடியர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதாவது, நம்மால் எவற்றைக் கட்டுப்படுத்த முடியுமோ, அதில் மட்டும் கவனம் செலுத்துவது. பிற நாடுகள் என்ன செய்கின்றன என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நாம் நமக்குத் தேவையான சிறந்த வாடிக்கையாளர்களாக இருக்க முடியும். ‘கனடியப் பொருட்களை வாங்குவோம், கனடியப் பொருட்களை உருவாக்குவோம்’ (Buy Canadian, Build Canadian). நாம் ஒன்றிணைந்து வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பெய்ஜிங்கிற்குச் சென்ற பிரதமர் கார்னி, சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனாவுடன் சில விவசாயப் பொருட்களுக்கான வரியைக் குறைக்கவும், சீன மின்சார வாகனங்களுக்கு (EVs) கனடாவில் குறிப்பிட்ட ஒதுக்கீட்டை வழங்கவும் இணக்கம் காணப்பட்டது. இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாகவே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) வலைத்தளத்தில், “கவர்னர் கார்னி கனடாவைச் சீனப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான ஒரு ‘இறங்குதுறை’யாக மாற்ற நினைத்தால் அது தவறானது. கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடியப் பொருட்கள் மீதும் உடனடியாக 100% வரி விதிக்கப்படும்,” என்று எச்சரித்துள்ளார். மேலும், சீனா கனடாவின் வணிகங்களையும் சமூகக் கட்டமைப்பையும் அழித்துவிடும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தில் (Davos) பேசிய கார்னி, அமெரிக்க மற்றும் மேற்கத்தியக் கொள்கைகளை விமர்சித்திருந்த சூழலில், தற்போது இந்த வர்த்தகப் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. வட அமெரிக்க வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல், கனடாவின் பொருளாதார உத்திகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.









