February 19, 2026

அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய கனடியத் தமிழர்: நீதிமன்றத்தில் குற்றம் ஒப்புதல்

வாஷிங்டன் – பெப்ரவரி 06, 2026: கனடாவின் ரொறொன்ரோ நகரைச் சேர்ந்த 40 வயதான ரமணன் பத்மநாதன், அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களை இணையம் வழியாகப் பாலியல் ரீதியாகச் சுரண்டிய குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த ஜனவரி 30, 2026 அன்று Washington D.C. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சிறுவர் ஆபாசப் படங்களை உருவாக்கியமை மற்றும் சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியமை ஆகிய இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ரமணன் பத்மநாதன் கடந்த ஏழு ஆண்டுகளாக (2014 முதல் 2021 வரை) “நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஒரு சிறுவன்” எனத் தன்னை போலியாகச் சித்தரித்து, Instagram மற்றும் Facebook Messenger போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக 145-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 11 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், சிலர் 6 வயதுடைய சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொடூரமான திட்டத்தின் கீழ், வீடியோ அழைப்புகள் (Video Chats) மூலமாகச் சிறுவர்களைப் பாலியல் ரீதியான செயல்களைச் செய்யுமாறு அவர் வற்புறுத்தியுள்ளார். அத்துடன் அவ்வாறு அவர்கள் ஈடுபடும் காட்சிகளை அவர்களின் அனுமதி இன்றியே ரகசியமாகப் பதிவு செய்து தனது கணினியில் சேமித்து வைத்துள்ளார். சிறுவர்கள் அவரது கோரிக்கைகளை நிராகரிக்கும் போது அல்லது அவரை சமூக வலைத்தளங்களில் முடக்கும் போது (Block), குறித்த வீடியோக்களை அவர்களது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனுப்பி விடுவதாகக் கூறி மிரட்டிப் பணிய வைக்கும் “Sextortion” எனும் முறையையும் அவர் கையாண்டுள்ளார்.

ஏற்கனவே கனடாவில் இவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 93 குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த வழக்கிற்காக, கடந்த டிசம்பர் 3, 2025 அன்று அவர் தற்காலிகமாக அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதிலிருந்து அவர் வாஷிங்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க சட்டத்தின்படி, இந்தக் குற்றங்களுக்காக அவருக்குக் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுவருக்கும் தலா 3,000 அமெரிக்க டாலர்கள் குறையாமல் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் மே 27, 2026 அன்று வழங்கப்படவுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய பாரிய குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பது கனடா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இணையப் பயன்பாட்டில் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலதிக செய்திகள்