இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையின் 77வது சுதந்திர தினம் எதிர்வரும் 04ம் தேதி (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.
நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று வரை நீதி கிடைக்காத பின்னணியில், தமக்கு சுதந்திர தினம் கிடையாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்னையை அடுத்து இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றஞ்சுமத்தி, யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் இன்று வரை அவர்களின் உறவினர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக லிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை அளித்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் அரசாங்கத்துக்கு வாக்களித்து, தற்போது அதே அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்த முற்படுகின்றனர். 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக மட்டக்களப்பு தவிர்த்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தன்வசப்படுத்தியது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் தமக்கான தீர்வை வழங்குமாறு கோரி, கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது மாத்திரமன்றி, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர்.
எனினும், இம்முறை அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்துவிட்டு, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் முன்வந்துள்ளனர். இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் எதிர்வரும் 4ம் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.









