January 15, 2026

அனுர செய்யக் கூடிய மாற்றம்! இது நடக்குமா அனுரா?

இரண்டு தடவைகள் ஆயுதப் போரா ட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலை வர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலை வர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார்.


ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்க ளாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல.


ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலுமான ஜேவிபி யின் வெற்றிக்குள் இருந்து தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படுகின்ற புதிய கூட்டை தமிழ் மக்கள் விருப்பு வெறுப்பு இன்றிக் கற்க வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு அது.


ஆயுதப் போராட்ட மரபில் வந்த ஓர் அமைப்பும் புத்திஜீவிகளும் இணைந்து அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அக்கூட்டின் மையக் கட்டமைப்புக்குள் 73 உறுப் பினர்கள் உண்டு. அதில் அறுவர் மட்டுமே தமிழர்கள். அங்கு இன விகிதாசாரம் பேணப்படவில்லை.


ஆனால் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியை ஆதரிக்கும் சில படித்தவர்கள் இம் முறை தேர்தலில் இனவாதம் பின்வாங்கி விட்டது என்று புளகாங்கிதம் அடை கிறார்கள். தமிழ் பொது வேட்பாளர் இன வாதத்தை முன் வைத்ததாகவும் விமர்சிக்கின்றார்கள்.

ஆனால் அரகலிய போராட்டத்தில் ஈடு பட்ட ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியது போல, தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதம் பெரிய அளவில் கதைக்கப்படவில்லை என்பதை வைத்து இனவாதம் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.


அனுர கூறும் மாற்றம் எனப்படுவது இனவாதம் இல்லாத ஓர் இலங்கை தீவா?


இது தேர்தல் காலம் மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் சபையின் பொறுப்புக் கூறலுக்கான விவாதங்கள் நடக்கும் ஒரு காலகட்டமும் ஆகும். வரும் ஏழாம் திகதி வரையிலும் ஐநா மனித உரிமை கள் கூட்டத் தொடர் நடைபெறும். இதில் பொறுப்புக் கூறல் தொடர்பில் அனுரவின் நிலைப்பாடு என்ன?


அசோசியேட்டட் பிரஸ் என்ற ஊடகத் துக்கு அவர் வழங்கிய செவ்வியை இங்கு பார்க்கலாம் பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்வியைப் பொறுத்த வரை அது பழிவாங்குகலுக்கான ஒரு வழியாக அமையக்கூடாது. யாரை யாவது குற்றச் சாட்டுவதாகவும் அமை யக்கூடாது. மாறாக உண்மையைக் கண்டு பிடிப்பதாக மட்டும் அமைய வேண்டும்…..பாதிக்கப்பட்ட மக்கள் கூட யாராவது தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் என்ன நடந்தது என்பதனை அறிவதற்கு மட்டும்தான் விரும்புகிறார்கள் என்று அனுர கூறுகிறார்.


அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குத் தயாரில்லை. குற்றங் களை விசாரிப்பது உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு என்று கூறுகிறார். ஆயின் யார் குற்றவாளி என்ற உண்மையை கண்டு பிடித்த பின் அவரை தண்டிக்காமல் விட வேண்டும் என்று அவர் கூற வருகிறாரா?


பாதிக்கப்பட்ட மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவருக்கு யார் சொன்னது? அதாவது அனுர பொறுப்புக் கூறுவதற்குத் தயார் இல்லை. குற்றவாளிகளைப் பாதுகாப்பது என்பதே இனவாதம் தான்.


நாட்டின் இனவாதச் சூழலை அனுர மாற்றுவார் என்று தமிழ் மக்களை நம்ப வைப்பதாக இருந்தால் அவர், கடந்த காலங்களில் அவருடைய கட்சி குறிப்பாக அவர் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த இரண்டு பிரதான நிலைப்பாடு களுக்கு பொறுப்புக் கூறுவாரா? மன்னிப்புக் கேட்பாரா?
தமிழ் மக்களின் தாயகத்தை அதாவது வடக்கையும் கிழக்கையும் சட்ட ரீதி யாகப் பிரித்தது ஜேவிபி. இது முதலாவது.


இரண்டாவது, சுனாமிக்குப் பின்னரான சுனாமிப் பொதுக் கட்டமைப்பை எதிர்த்து அனுர தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். சுனாமிப் பொது க்கட்டமைப்பு எனப்படுவது மனிதாபி மான நோக்கங்களுக்கானது.

இயற்கைப் பேரழிவு ஒன்றுக்குப் பின் உருவாக்க ப்பட இருந்த மனிதாபிமானக் கட்ட மைப்பு அது. அதைக் கூட எதிர்த்த ஒருவர் இப்பொழுது அதற்கு பொறுப்பு கூறுவாரா? தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அவரிடம் இனவாதம் இல்லை என்று கூறி அவருக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாகக் கேட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள படித்த வர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா?


அதுமட்டுமல்ல தமிழ் பொது வேட்பாளரோடு அனுர பேச முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தமிழ் பொது வேட்பாளரோடு உரையாடத் தயாராக இருந்தார்கள். ஆனால் அனுர உரையாடத் தயாராக இருக்க வில்லை.


யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திடம் ஜேவிபி அது தொடர்பான கோரிக்கை களை முன் வைத்ததாகத் தெரிகிறது. எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பிடம் அவர் உத்தியோகபூர்வ மான கோரிக்கைகள் எவற்றையும் முன் வைத்திருக்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளரை அவர் பொருட்படுத்த வில்லை. அதாவது தமிழ் வாக்குகளை அவர் பொருட்படுத்தவில்லை?


அவர் பதவியேற்ற போது தேசிய கீதம் இசைக்கப்படுகையில் ஒரு பகுதி பிக்குகள் எழுந்து நின்றமையை சில தமிழர்கள் பெரிய மாற்றமாகச் சித்தி ருக்கிறார்கள். ஆனால் பதவியேற்ற போது பௌத்தப்பிக்குகளின் முன் அவர் மண்டியிட்டு அமர்ந்து ஆசீர்வாதம் பெறுவதை அவர்கள் பார்க்க வில்லையா?


அவர் இடதுசாரி மரபில் வந்த ஒரு தலைவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரால் சிங்கள பௌத்த அரசு கட்ட மைப்பின் வழமைகளை மீறிச் செயல் பட முடியவில்லை என்பதைத் தான் அந்த ஆசீர்வாதம் பெறும் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தியது. அந்த மத ரீதியான சிஸ்டத்தை அவரால் மாற்ற முடியவில்லை. அவரும் அந்த சிஸ்டத் தின் கைதி தான்.


அதனால் தான் தமிழ் மக்கள் அவர் கூறும் மாற்றத்தை அதாவது சிஸ்டத் தில் மாற்றம் என்பதனை சந்தேகத்தோடு பார்க்கின்றார்கள். ஏனெனில், தமிழ் மக்கள் கேட்பது மேலோட்டமான சிஸ்ட த்தில் மாற்றத்தை அல்ல. தமிழ் மக்கள் கேட்பது அதைவிட ஆழமான கட்ட மைப்பு மாற்றத்தை. ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் மாற்றம். அதைச் செய்ய அனுராவால் முடியுமா?


பதவியேற்ற பின் அவர் ஆற்றிய உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பின்வருமாறு கூறுகிறார். சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் நாம் இலங்கைப் பிரஜைகள் என்று பெருமையுடன் வாழக்கூடிய நடை முறைச்சாத்தியமான ஒரு நாடு உரு வாகும் வரை, இந்த நாடு தோல்வி யடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார.அரசியல் மறுசீரமைப்பு களை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம். தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந் நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.


இது அரசியல் அடர்த்தி குறைந்த வார்த்தைகளால் வழங்கப்படும் கவர்ச்சி யான ஆனால் மேலோட்டமான வாக் குறுதி. இப்படிப்பட்ட லிபரல் வாக்குறுதிகள் பலவற்றை தமிழ் மக்கள் ஏற்கனவே கடந்து வந்து விட்டார்கள். தமிழ் மக்கள் கேட்பது அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப் படுத்தும் கட்டமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், தேசங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ளும் மாற்றத்தை.

அந்த அடிப்படையில் வழங்கப் படும் ஒரு தீர்வை. தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கும் ஒரு தீர்வை. அப்படிப் பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அனுரவால் முடியுமா?

கட்டுரையாளர்: யாழ்ப்பாணத்தில் இருந்து – நிலாந்தன்

கட்டுரைகள்…