வருஷம் பிறந்த பின் வந்த முதலாவது பௌர்ணமி நாளில் தையிட்டியில் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மக்களும் நில மீட்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது, தமிழ்மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி வவுனியாவில் கூடி உட்கட்சி முரண்பாட்டை வெளிப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தது. வருஷம் பிறந்த மூன்றாம் நாளில் தமிழ்த் தேசிய அரசியலின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் இது.
இத்தனைக்கும் தையிட்டியில் தமிழரசுக் கட்சிக்காரர்களும் காணப்பட்டார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள பெரிய கட்சி அது. அதிகளவு நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பது. தானே தலைமைக் கட்சி என்றும்,தானே தமிழ் அரசியலை வழி நடத்துவதாகவும் கூறிக்கொள்கிறது; கருதிக் கொள்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உட்பகையைத் தீர்த்துக் கொள்ள முடியாத ஒரு கட்சி.
தொடர்ந்தும் பதில் தலைவரின் கீழும் பதில் செயலாளரின் கீழும் இயங்குவதை ஒரு தோல்வியாகச் சுட்டிக்காட்டக்கூடிய மூத்த கட்சி உறுப்பினர்களும் இல்லை. மூத்த ஆதரவாளர்களும் இல்லை. மதத்தலைவர்களாலோ அல்லது சிவில் சமூகத் தலைவர்களாலோ யாராலுமே தீர்க்கமுடியாத ஒரு முரண்பாடாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தானே தனக்குள் இரண்டாகப் பிளந்து நிற்கிறது. ஏதாவது ஓர் அணி பலமடைந்து கட்சித் தலைமையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் தவிர கட்சி தொடர்ந்து சிதைந்து கொண்டே போகும் நிலைமைகள்தான் அதிகரிக்கின்றன.
கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் சமூக வலைத்தளங்களில் முகமூடி அணிந்து கொண்டு ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்குகிறார்கள். ஒருவர் மற்றவரை மதிப்பிறக்கம் செய்கிறார்கள். ஒருவர் மற்றவரை சுற்றி வளைக்கும் முற்படுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் அது அதிகம் சீரழிந்த ஒரு காலகட்டமாக இதைக் கூறலாமா? இதை அறிவுப்பூர்வமாக அணுகத்தக்க ஒருவருமே கட்சிக்குள் இல்லையா? இந்த முரண்பாட்டை அறிவுபூர்வமாக அணுகினால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். கட்சி தனக்குள் இரண்டுபட்டிருக்கும் வரை கட்சியாகவும் உருப்பட முடியாது; தமிழ்த் தேசிய அரசியலையும் முன்னோக்கி நகர்த்த முடியாது.
இந்த முரண்பாட்டைத் தீர்க்க கட்சிக்குள்ளும் ஆளில்லை கட்சிக்கு வெளியேயும் ஆள் இல்லை என்பது தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் பாரதூரமான சீரழிவின் பின்னணியில் தையிட்டி போன்ற போராட்டக் களங்களில் உறுதியாக முன்னோக்கிச் செல்ல முடியுமா? ஒவ்வொரு பௌர்ணமி நாளும் போராடி காணிகளை மீட்க முடியுமா? இரண்டு பௌர்ணமிகளுக்கு இடையில் அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொண்டுவிடும்.
அரசாங்கம் தமிழ்த் தேசிய அரசியலின் பலவீனத்தை நன்கு விளங்கி வைத்திருக்கிறது. அதனால்தான் தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தை ஒரு காணிப்பிரச்சனையாக அது குறுக்கப் பார்க்கிறது. கடந்த பௌர்ணமி நாள் போராட்டத்தின் பின் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சரும் சட்டத்தரணிமான ஹர்ஷண நாணயக்கார, ”இது காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் இடையிலான ஒரு பிரச்சினை. இதில் வேறு தரப்பினர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்… காணி உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் செயல்படாது பொறுமை காக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டின் முடிவில் யாழ் அரச அதிபருக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பும் அந்த அடிப்படையிலானது தான். தமிழ்ப் பகுதிகளில் உள்ள முக்கியத்துவம் மிக்க, நயினா தீவு விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் பக்கம் நின்று கதைத்தாலும், அவரும்கூட இந்த விடயத்தை காணிப் பிரச்சனையாகத்தான் சுருக்குகிறார். திஸ்ஸ விகாரையின் அதிபதி அதனை முழுக்க முழுக்க காணிப் பிரச்சினையாகவே குறுக்குகிறார்.
ஆனால் திஸ்ஸ விகாரை விவகாரம் ஒரு காணிப்பிரச்சினை மட்டுமல்ல. சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்.
திஸ்ஸ விகாரை விவகாரம் என்பது சட்ட நோக்கு நிலையிலும் காணி உரிமையாளர்களின் நோக்கு நிலையிலும் காணி அபகரிப்பாக இருக்கலாம். ஆனால் இங்கே அந்தக் காணியை அபகரித்து வைத்திருப்பது ஒரு விகாராதிபதி அல்ல. அவர் நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு கூட்டுச் செயற்பாட்டின் ஒரு கருவி மட்டுமே. அந்த விகாரைக்கு அத்திவாரம் போட்டது ராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா. அந்த விகாரையை பகலும் இரவும் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பியது படையினர். அந்த விகாரைக்கு பாதுகாப்பு வழங்குவது படையினரும் போலீசாரும். அந்த விகாரையின் அதிபதிக்கு அவர் சார்ந்த பௌத்த மகா சங்கம் வடபகுதிக்கான உயர் பதவியை வழங்கியது.
எனவே இது ஒரு கூட்டுச் செயற்பாடு. கூட்டு ஆக்கிரமிப்பு. அதை அதன் அரசியல் அடர்த்திக்கூடாகச் சித்தரித்தால் அது மிகத்தெளிவான ஒரு நிலப் பறிப்பு நடவடிக்கை. மிகத் தெளிவான ஒரு சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கை. அதாவது 2009க்குப் பின்னரான ஆக்கிரமிப்பின் ஆகப்பிந்திய உதாரணம். அதிலிருக்கும் அரசியலை நீக்கி அதைக் காணிப் பிரச்சினையாகக் காட்டுவதே ஓர் அரசியல்தான்.
எனவே அதனை அதற்குரிய அரசியல் பரிமாணத்தோடுதான் அணுக வேண்டும். காணி உரிமையாளர்களை அழைத்து அரசு அதிபர் பேசுவதனாலோ அல்லது அரசு அதிபரும் காணி உரிமையாளர்களும் விகாரதிபதிகளும் பேசுவதனாலோ இந்தப் பிரச்சினை தீர்த்துவிடாது. அதற்கு அரசியல் தீர்வு வேண்டும். இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை இல்லை என்று கூறுகிறது. தான் இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் தையிட்டியில் நடப்பது சிங்கள பௌத்த மயமாக்கல்தான். இனவாத நடவடிக்கைதான்.









