கொழும்பு – அக்டோபர் 25: இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சிக்கித் தவித்த வணிகக் கப்பல்களில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட 40 ஈரானிய மாலுமிகளை இலங்கை அதிகாரிகள் மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். மனிதாபிமான மற்றும் மருத்துவ அவசரநிலையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர்கள் ஈரானுக்குத் திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானிய தூதரகத்தின் மூலம் பெறப்பட்ட தூதரக அளவிலான வேண்டுகோளைத் தொடர்ந்து, இந்த மனிதாபிமான மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் துஷார ரொட்ரிகோ உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பிலிருந்து சுமார் 126 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட மாலுமிகளுக்கு உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, பின்னர் அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்குப் பயணமாவதற்கான நிர்வாக நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஈரானிய தூதரகம் மற்றும் உள்ளூர் கப்பல் முகவர் நிறுவனங்கள் இந்த மாலுமிகளை கரைக்குக் கொண்டுவருவதற்கான படகுகளை ஒருங்கிணைத்த நிலையில், குடிவரவு, குடியகல்வு மற்றும் துறைமுக பாதுகாப்பு நடைமுறைகளை இலங்கை அதிகாரிகளும் கடற்படையினரும் முழுமையாகக் கையாண்டதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press – AP) செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளுக்கு உட்பட்ட எண்ணெய் கப்பல்கள் உட்பட 19 வணிகக் கப்பல்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்ட மாலுமிகள் என ராய்ட்டர்ஸ் (Reuters) மற்றும் தி இந்து (The Hindu) ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து, இலங்கைக் கடற்கரையிலிருந்து சுமார் 24 கடல் மைல் (Nautical miles) தொலைவில் பல ஈரானிய கப்பல்கள் நீண்டகாலமாக நிலைகொண்டுள்ளன. அக்கப்பல்களில் உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வந்த போதிலும், அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் பொருளாதாரத் தடைகள் மற்றும் தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு, இக்கப்பல்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்குவதை இலங்கை அதிகாரிகள் தவிர்த்து வந்தனர். எனினும்,கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே இந்த வெளியேற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய கடற்படையினர் மற்றும் மாலுமிகள் எதிர்கொள்ளும் இரண்டாவது பெரிய மனிதாபிமான நிகழ்வு இதுவாகும். முன்னதாக கடந்த மார்ச் மாதம் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதில் ஈரானிய போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) மூழ்கியபோது, இலங்கை அதிகாரிகளும் கடற்படையினரும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு உயிர் பிழைத்தவர்களைத் தாயகம் திருப்பி அனுப்ப உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









