April 14, 2026

கணிதமேதை கலாநிதி விஜயகுமார்

கணிதமேதை, கணணி நிபுணர், பல்கலைக்கழக விரிவுரையாளர், புல்லாங்குழல் இசைக்கலைஞர், மிகச்சிறந்த இசை ரசிகர், ஓவியர், பொறியியலாளர், பொறியியல்துறை விரிவுரையாளர் என பன்முகத திறைமைகள் கொண்ட கலாநிதி விஜயகுமார் அவர்கள் மறைந்து இன்றுடன் 9 வருடங்கள் நிறைவு பெறுகின்றது. இந்த வேளையில், கலாநிதி விஜயகுமார் அவர்கள் கனேடிய தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளையும், அன்னாரின் மேன்மைகளையும் இக்கட்டுரை நினைவு கூர்கின்றது.

Professor, University of Toronto • Mathematician,  Rocscience Inc

தரணியில் உதித்தது: 1953-05-17 – தரணியைத் துறந்தது: 2017-03-31

யாழ்ப்பாணம் வடமாரட்சியில் துன்னாலை என்னும் கிராமத்தில், திரு. திருமதி சின்னத்துரை நாகரத்தினம் தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக 1953ம் ஆண்டு மே மாதம் 17ந் திகதி பிறந்த திரு விஜயகுமார் அவர்கள் இயற்கையாகவே கல்வி, விளையாட்டு, இசை என பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள். யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஹாட்லிக் கல்லூரயின் மாணவனான விஜயகுமார் 1970ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் நான்கு பாடங்களிலும் ஏ-(4A) தரத்தில் சித்திபெற்று சாதனை நிகழ்த்தி தனது கல்லலூரிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டதாரிப் படிப்பினை முடித்துக் கொண்ட இவர், 1976ம் ஆண்டு ரொரன்ரோ பல்கலைக்கழக புலமைப் பரிசில் மூலம் கனடாவிற்கு புலம் பெயர்ந்து, ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பினையும், பின்னர் முனைவர் படிப்பினையும் முடித்து அங்கேயே விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.

எளிமையான குணம், ஆடம்பரம், பகட்டுத்தனம் என்பன துளிகூட இல்லாத இயல்பான வாழ்வு, அற்புதமான நகைச்சுவையுணர்வு என்பன இவரின் சொத்துக்கள். மிகச்சிறந்த கல்விமானாக இருந்தும் ‘தலைக்கனம்” எதுவும் இல்லாமல் எல்லோருடனும் அன்பாகப் பழகியவர். புகழ்பெற்ற ஸ்ரான்போட் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முதல், சாதாரண சிறுகைத்தொழில் செய்யக்கூடிய பாமரத்தமிழன் வரை எல்லாத்தரப்பிலும் இவருக்கு நண்பர்களும், நலன் விரும்பிகளும் உள்ளனர்.

1980களில் இலங்கைத்தீவின் இனப்பிரச்சனை காரணமாக ஈழத்தமிழர்கள் அகதிகளாக புலம் பெயரத் தொடங்கிய போது, தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்கமுடியாதவை. தாயகத்தில் தமிழர்கள் வாழ்வு சின்னாபின்னப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த 80 மற்றும் 90ம் ஆண்டுகளில் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களை, கனேடிய அரசிற்கும், பொதுமக்களிற்கும், மனித உரிமை அமைப்புக்களிற்கும், ஆங்கிலப் பத்திரிகைககளிற்கும் எடுத்துச் சொல்ல, ஆங்கிலம் தெரிந்த போதுமான தொண்டர்கள் அரிதாகவிருந்த காலம் அது. அக்காலத்தில், அறிக்கைகள் தயாரிப்பது, அறிக்கைளை ஆங்கிலத்தில் வடிவமைப்பது, ஆவணப்படுத்துவது போன்றவற்றை முன்னின்று நடாத்திய ஒரு சில தொண்டர்களில் கலாநிதி விஜயகுமார் அவர்கள் முதன்மையானவர். பகலில் பல்கலைக்கழகம், பின்னர் மாலையிலும், இரவிலும் மனித உரிமை மீறல்களிற்கு எதிரான செயற்பாடுகள் என விளம்பரங்களை விரும்பாமல், ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்னும் பாங்கில் இவர் இயங்கி வந்த காரணத்தால், இவரது செயற்பாடுகள் ஒரு குறித்த நண்பர்கள் வட்டத்துக்குள்ளளேயே அறியப்பட்டிருந்தது.

ஒரு இனவெறி அரசுக்கெதிராக, அதன் இனஅழிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள, புலம்பெயர் தேசத்தில் தமிழினம் காலூன்றி பொருளாதார ரீதியில் பலமற்ற நிலையில் இருந்தபோது, ஒரு வலுவான பிரச்சாரத்தை கனேடிய சமூகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் மேற்கொள்ள தொழில் நுட்பம் மூலம் கணணிமயப்படுத்தி எங்கள் சமூகத்தை பலப்படுத்தியவர் கலாநிதி விஜயகுமார் அவர்களாவார்.


87ம் ஆண்டுவரை தமிழ் வானொலிகள் இல்லாத காலத்தில், தொலைபேசிச் செய்திச் சேவைகளே ஒரேயொரு தினசரி தொடர்புச்சாதனமாக விளங்கிய காலம். நெருக்கடி மிகுந்த அந்தக்காலத்தில், செய்திக்கான இலக்கத்தை அழைத்து இலகுவில் செய்திகளை அறிந்துகொள்ளமுடியாது. குறிப்பாக அக்காலத்தில் மாலை 7மணிக்கு பின்னர்தான் அன்றைய செய்திகள் பதியப்படும். இதனால் 7 மணியலிருந்தே எல்லோரும் ஒரே இலக்கத்தை அழைக்கத் தொடங்கினால் இலகுவில் இணைப்பு கிடைத்துவிடாது.


இதனால் பலரும் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்தே செய்திகளை அறியமுடியும். இக்காலத்தில் உலகத்தமிழர் இயக்கத்தின் தொலைபேசிச் செய்திச் சேவையை கணணிமயப்படுத்தி ஒரே நேரத்தில் பலரும் கேட்கக்கூடியவாறு செய்து காத்திருப்பு நேரத்தை வெகுவாவகக் குறைத்ததன் முலம் எல்லோரும் குறுகிய நேரத்திற்குள் செய்திகளை கேட்டு அறியக் கூடியவாறு செய்தார்.


அன்னாரின் தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்குமான மிகமுக்கிய பங்களிப்பு கணணித் தமிழ் எழுத்துக்களை வடிவமைத்து, அவற்றை பொதுசன பாவனைக்கு அறிமுகப்படுத்தியமையாகும். இன்று பலரும் நாம்தான் தமிழை கணணிக்கு முதன் முதலாக எடுத்து வந்தோம் என்று உரிமை கொண்டாடலாம். ஆனால் கலாநிதி விஜயகுமார் என்றைக்குமே அந்தப் போட்டிக்குள் தன்னை உள்வாங்கிக் கொண்டதில்லை. தமிழ்க் கணணி எழுத்துக்களை முதலில் உருவாக்கியவர் அமெரிக்க வெள்ளைக்காரரான தமிழ்ப் போராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் என்பவரே என இவரே பலருக்கும் எடுத்துச் சொல்வார். ஆனால் கனடாவின் மூத்த தமிழ்ப்பத்திரிகையான உலகத்தமிழர் முதன் முதலாக முற்று முழுதாக கணணிமயப்படுத்தப்பட்டபோது, அதற்கான எழுத்துக்களை வடிவமைத்து, பத்திரிகைக்கான கணணிமூல பக்கவடிவமைப்புக் கலையினை தொண்டர்களுக்கும் பயிற்றுவித்து, உலகின் கணணிமயப்படுத்தப்பட்ட முதல் தமிழ்ப்பத்திரிகை என்ற பெருமையை தேடித்தந்த முழுப்பெருமையும் கலாநிதி விஜயகுமார் அவர்களையே சாரும். மேடைகளில் யாரும் இதைப் பெரிதாகச் சொன்னதுமில்லை, பத்திரிகைகளில் யாரும் இதைப் பெரிதாக எழுதியதுமில்லை. காரணம், இவருடன் சேர்ந்து வேலைசெய்த நண்பர்களுக்கு இவர் விளம்பரங்களை விரும்புவதில்லை என்பது நன்றாகத் தெரியும் அல்லது கூடுதலாக இவ்வாறான வேலைகளை இரவிரவாகவே இவர் செய்வதால், இவருடன் இணைந்து பணியாற்றிய நண்பர்களைத் தவிர ஏனையோருக்கு பெரிதாகத் தெரியாது.


தவிர இத்தனை முயற்சிகளை, இவரோ அல்லது இவருடன் பணியாற்றிய தொண்ணடர்களோ முதல் முத்திரைக்கான சாதனைக்காக செய்யவில்லை. நெருக்கடியானதோர் காலத்தில் எமது இனத்திற்கான அவசரத் தேவைகள் இருந்தன. புலம்பெயர் தேசத்தில் தமிழில் பத்திரிகை வேண்டும் என்ற பொதுவான தேவையும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது, எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமராண்டித்தனமான படுகொலைகள் பற்றியும், அந்நிய இராணுவத்திற்கு எதிராக எங்கள் மண்ணின் போராளிகள் நாடாத்திய வீரம் செறிந்த போர் வெற்றிகளையும் தமிழர்களுக்கு எடுத்துச்சொல்ல ஒரு பத்திரிகை வேண்டும் என்ற குறிப்பான தேவையும் இருந்த அந்தக் காலத்தில்தான் கலாநிதி விஜயகுமார் அவர்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து உலகத்தமிழர் பத்திரிகையினை கணணிமயப்படுத்தி வெற்றி கண்டார். உலகத்தமிழர் பத்திரிகை வெற்றிகரமாக வெளிவரத் தொடங்கியதன் பின்னர், தமிழோசை (தற்போதைய கனடா ஈழநாடு), தமிழருவி, தீபம் போன்ற பல பத்திரிகைகள் வெளிவரவும், பல தமிழ் அச்சுக்கூடங்கள் உருவாகவும், விளம்பரப் பலகை வடிவமைக்கும் கைத்தொழில்கள் உருவாகவும், கலாநிதி விஜயகுமார் அவர்களும், அவரினால் உருவாக்கப்பட்ட கணணி எழுத்துக்களும் காரணமாகவிருந்தன.


1990 இல் Ethno Multimedia என்ற நிறுவனத்தை ஆரம்பித்து எழுத்து வடிவமைப்பினை விரிவுபடுத்தினார். அவர் தமிழில் உருவாக்கிய எல்லா எழுத்துக்களிற்கும், கர்நாடக சங்கீத இசைப்பிரியரான இவர் ராகங்களின் பெயர்களை சூட்டினார். 70க்கும் மேற்பட்ட எழுத்து வடிவங்களை உருவாக்கிய இவரின் எழுத்துக்களில், அடானா, பூபாளம், மோகனம், சரஸ்வதி, ஆபோகி என்பன பிரபலமான எழுத்து வடிவங்களில் சிலவாகும்.


அன்னாரின் நினைவாக, கல்வித்துறையிலும், கணணித் துறையிலும் சமுகத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை கௌரவிக்கும் முகமாகவும் ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில்
கலாநிதி சின்னத்துரை விஜயகுமார் புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் முழுநேரக் கல்வி பயிலும் அதே நேரம், தமிழ் மொழி அல்லது தமிழ் சமுகம் தொடர்பான பாடங்களை தங்கள் கற்கை நெறியின் ஓர் பகுதியாகக் கொண்ட மாணவர்களுக்கு இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தை நீண்டகாலம் தொடர்ந்து நடாத்தவும், பரிசுத்தொகையை அதிகரிக்கவும், தொடர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்க விரும்புவோர் ரொரன்ரோ பல்கலைக்கழக இணையத் தளம் மூலமாக பங்களிப்பினை செய்ய முடியும்.

Dr. Sinnathurai Vijayakumar Scholarship

Known to his friends as Vijay, Dr. Sinnathurai Vijayakumar – a talented scholar who held a PhD in Chemical Engineering from the University of Toronto was a brilliant mathematician.

A member of the The Rock Group at the University of Toronto’s Faculty of Applied Science & Engineering’s Galbraith Building, Vijay worked on Boundary Element Method with John Curran, where he contributed to many useful software developments. He helped much of the mathematical publishing activities of Diran Basmadjian of Chemical Engineering.

Vijay was a respected colleague and a generous man who will be dearly missed by all who knew him. He was passionate about mathematics, computing, engineering and the Tamil community, producing one of the first professional Tamil language fonts for personal computers. A scholarship has been established at the University of Toronto to honour his memory.

பாரம்பரிய தமிழ் தமிழ் தட்டச்சுப் பொறியினைத் (Type Typewrtier Keyboard) தழுவி கணணிப் பயன்பாட்டிற்காக டாக்டர் விஜயகுமார் அவர்களினால் சிறுமாற்றம் செய்யப்பட்ட தமிழ் விசைப்பலகை அல்லது தமிழ்க் கணணி தட்டச்சு

திரு விஜயகுமார் அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் மற்றும் பிறமொழி கணணி எழுத்துக்கள

80களில் வீடியோ தொழில்நுட்பத்திற்கு பிரபலமாகவிருந்த அமிகா கணணிக்கான எழுத்துக்களையும் கலாநிதி விஜயகுமார் அவர்கள் உருவாக்கியதன் பின்னர், தமிழில் வீடியோ தயாரிப்பும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. தமிழில் மட்டுமல்லால் இந்திய மொழிகள் எல்லாவற்றிற்குமான எழுத்துக்களை உருவாக்கி அவற்றினை பாவனைக்கு அறிமுகப்படுத்துவதிலும் வெற்றிகண்டார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி, குஜராத்தி, உருது போன்ற வட மொழிகளிலும் இவர் உருவாக்கிய எழுத்துக்கள் இன்றும் அந்தந்த மொழிகளில் பாவனைக்கு உள்ளது என்பதே இவரின் மிகப்பெரும் சாதனையாகும்.


விஜயகுமார் அவர்கள் ஒரு பொறியியல் துறை முனைவர் பட்டம் பெற்ற கல்விமானாக, பேராசிரிராகவிருந்த போதும், அவர் அடிப்படையில் ஓர் கணிதவல்லுனார். உலகின் மிகப்பெரிய கணிதமேதை ராமனுஜன் தமிழர் என்பதில் இவருக்கு மிகப்பெருமை. மிகப்பெரிய அளவில் தமிழர்களால் அறியப்படாத ராமனுஜன் பற்றி ஆண்டுதோறும், ரொரன்ரோ பல்கலைககழகத்தில், அவரது நினைவுநாள் அனுஷ்டிக்கப்படுவது பற்றியெல்லாம் பெருமையாக சொல்லிக்கொள்பவர்.


கணித்திலும், கணணியிலும், கலாநிதி விஜயகுமார் அவர்கட்கு இயல்பாகவே இருந்த ஆர்வம், பின்னாளில், Computer Programing இனை தானாகவே பயின்று, பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரவுரையாற்றும் அளவிற்கு உயர்ந்திருந்தார். ரொரன்ரோ பல்கலைக்கழக “The Rock Group” இன் நீண்டகால உறுப்பினரான இவர் இங்கே பல முக்கியமான ஆராய்சிகளை மேற்கொண்டதுடன் உபயோகமான கணணி மென்பொருட்களையும் (Software) உருவாக்கியிருந்தார்.


இவரது பல்கலைக்கழக கற்பித்தலின் அனுபவம் காரணமாக, மாணவர்கள் உயர்கல்வி பாடசாலைகளிலேயே, கணணி, மற்றும் எந்திரவியல் (robotics)) என்பனவற்றில் ஆரம்ப அறிவினை பெற்றிருக்க வேண்டும் என நம்பினார். சவால்கள் நிறைந்த பல்கலைக்கழக கல்வியினை வெற்றிகரமாக எதிர்கொள்ள இத்துறைகளில் போதுமான ஆரம்ப அறிவு இருக்கவேண்டும் என நம்பினார். எனவே இத்தகைய துறைகளில் தமிழ் மாணவர்கள் பயில ஓர் சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் என்ற நோக்கில், தமிழ் மாணவர்களுக்கான robotics வகுப்புக்களை 1998ம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தார். ரொரன்ரோவில் தமிழ் மாணவர்களுக்கு robotics வகுப்புக்களை முதலில் ஆரப்பித்தது கலாநிதி விஜயகுமார் அவர்களேயாகும்.


தனியார் கல்விநிறுவனங்கள் வெற்றிகரமான வியாபாரமாக மாறியிருந்த சூழலிலும், தனது சேவையினை வியாபாரமயப்படுத்துவதனை கடைசிவரை உறுதியாகத் தவிர்த்து வந்தார். இவரிடம் பயின்ற மாணவர்கள், இன்று வெற்றிகரமாக பல்கலைக்கழக படிப்பு முடித்து பல்வேறு துறைகளிலும் வேலைபெற்று நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பல உயர் கல்வி மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். பல்கலைக் கழகங்களில் உள்ள Robotics Club களில் நம்பிக்கையுடன் தங்களை இணத்துக் கொண்டுள்ளனர். இவையெல்லாம் கலாநிதி விஜயகுமார் அவர்கள் கண்ட கனவுகள் நனவாகி வரும் நாட்கள். இத்தகைய வெற்றிகளை, தனது வெற்றியாகக் கருதாமல், தமிழ்ச் சமுதாயத்தின் வெற்றியாக கருதியவர் அவரது கனவுகள் நனவாகி வரும் வேளையில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

கற்றலை தொழிலாகவும், கற்பித்தலை தொண்டாகவும் கொண்டிருந்த கலாநிதி விஜயகுமார் அவர்கள் விட்டுச்சென்ற இடம் இன்றுவரை வெற்றிடமாகவே இருக்கின்றது. அந்த வெற்றிடம் இலகுவில் நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகும் என்பதனைக் காலம் இன்றுரை உறுதி செய்துகொண்டேயிருக்கிறது.

கட்டுரைகள்…