இந்திய அரசியலின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் பின்னணியில் காலத்தின் கடுமையான சோதனைகளைச் சுமந்து நீதியின் நீண்ட பயணத்தை நெஞ்சில் தாங்கி வந்தவர் பேரறிவாளன் 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மரண தண்டனையின் நிழலைத் தாண்டி ஆயுள் தண்டனையின் சங்கிலியையும் சுமந்து இறுதியில் 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் விடுதலை பெற்று இன்று சட்டத்தின் வழியில் நியாயம் பேசும் வழக்கறிஞராக உயர்ந்து நிற்பது வரலாறே வியக்கும் மாற்றமாகும்.
1999ம் ஆண்டு காலக் கட்டத்தில் 26 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப் பட்ட அந்த அதிர்ச்சிகரமான தருணம் மனித உரிமை வரலாற்றில் கரும் புள்ளியாகப் பதிந்தது.
அந்த அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் தலைமையில் உலகளாவிய அளவில் எழுந்த ஒற்றுமைக் குரல் தமிழரின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும். அந்த இயக்கத்தின் ஓர் அங்கமாக கனடிய மண்ணில் இருந்து வெளிவரும் உங்கள் ஈழநாடு பத்திரிகை 28,597.26 கனேடிய டொலர்களை திரட்டி அனுப்பிய செயல் வெறும் நிதியுதவி அல்ல. அது நீதிக்காக எழுந்த மனிதநேயத்தின் சின்னமாகும்.
ஈழநாடு பத்திரிகை வழங்கிய அன்றைய காலத்தில் பெரு நிதியை நினைவு கூர்ந்து திரு நெடுமாறன் ஐயா அவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம் காலத்தைத் தாண்டி பேசும் சாட்சியாகத் திகழ்கிறது.

இன்று அதே வழக்கில் தண்டிக்கப்பட்டு காலத்தின் சுழலில் துன்பத்தை அனுபவித்து நீதியின் ஒளியில் விடுதலை பெற்று சட்டத்தரணியாக பதிவு செய்துள்ள பேரறிவாளன் ஒரு மனிதனின் மறுபிறவியைப் போன்ற உயர்வாகும்.
இது ஒரு சாதாரண சாதனை அல்ல. இது சோதனைகளைச் சவால்களாக மாற்றிய மனவலிமையின் வெற்றி. சிறைச்சாலையின் சுவர்களுக்குள் சிக்கிய கனவுகள் இன்று நீதிமன்ற அரங்கில் நியாயம் பேசும் குரலாக மாறியுள்ளன.
அவரது பயணம் தண்டனை பெற்றவன் என்ற முத்திரையிலிருந்து நீதியை நிலை நிறுத்துபவன் என்ற உயர்ந்த அடையாளத்துக்கான மாற்றத்தின் சின்னமாகும். இன்றைய இளைஞர்களுக்கு இது ஓர் உற்சாகப் பாடமாகும் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் மன உறுதியும் நேர்மையும் இருந்தால் மனிதன் தன்னை மீண்டும் உருவாக்க முடியும் என்பதற்கான சான்றாகும்.
வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ள பேரறிவாளனுக்கு கனடா ஈழநாடு வாசகர்கள் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்!
அவரது குரல் இனி தனிப்பட்ட அனுபவத்தின் குரலாக மட்டுமன்றி அநீதிக்கு எதிரான சமூகத்தின் குரலாக ஒலிக்கட்டும். நீதியின் பாதையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மனித உரிமைகளின் வரலாற்றில் புதிய ஒளிக்கீற்றாக விளங்கட்டும். வாழ்க! வளர்க!
T.K.பரமேஸ்வரன், ஈழநாடு









