நெஞ்சம் நிறைந்த ஈசன் அண்ணா! மண்ணில் இருந்து விடை பெற்றார்!
கௌரிஈசன் – இராசநாயகம் – நெல்லியடி
ஈசன் அண்ணா! ஒரு மனிதர் அல்ல. ஒரு மானுட விடுதலைப் போராளி அவர்.
ஈசன் அண்ணையை இழப்பது என்பது ஒரு உயிரை இழப்பதல்ல. ஒரு சமூகத்தையே இழப்பதற்கு நிகரானது. அந்த சமூகமே இன்று நம்மிடமிருந்து தனது மூச்சை நிறுத்திக் கொண்டது.
நெஞ்சம் நெகிழ வைக்கும் நினைவுகளின் நடுவே அவரைப் பற்றிக் கூறத் தொடங்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு கண்ணீர்த் துளியாக மாறுகின்றது. அவர் எனக்கு ஒரு சாதாரண நண்பர் அல்ல. என் நெஞ்சத்துக்கு நெருக்கம் கொண்ட உறவினர்களை விட மேலானவர்.
நினைத்தாலே நெஞ்சை நிரப்பும் நம்பிக்கையின் உருவம்.

தமிழ்த்தேசியம் என்ற சொல்லை வார்த்தைகளில் மட்டும் அல்ல வாழ்வின் சொத்தாகக் கருதியவர் ஈசன் அண்ணா.
அது அவருக்கு ஒரு அரசியல் கோட்பாடு அல்ல. ஒரு உயிர்ப் பற்று அல்ல. அது அவரின் சுவாசம் அவரின் இரத்த ஓட்டம். விடுதலைப் போராட்டம் அவருக்கு எட்டாத தொலைவில் நிகழ்ந்த ஒரு செய்தி அல்ல. அவரின் குடும்பத்தின் உள்ளங்கையில் எழுதப்பட்ட வரலாறு.
தன் சொந்தத் தம்பியை எம் விடுதலைப் போராட்டத்தில் இழந்து வேதனையில் நின்றவர். ஆனால் அந்த இழப்பு அவரை நிலை குலைய வைக்கவில்லை. மாறாக அவர் உள்ளத்தில் அர்ப்பணிப்பின் தீயை மேலும் எரிய வைத்தது.
அவரது குடும்பம் ஒரு வீடு அல்ல. அது ஒரு உறுதியின் உறைவிடம். ஒரு அர்ப்பணிப்பு மிக்க ஒரு தூண். விடுதலைக்கான போராட்டத்தில் அந்த குடும்பம் நின்ற விதம் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒன்று.
ஈசன் அண்ணா சத்தமில்லாமல் செயலில் நின்றவர். அல்ல. சத்தமாகச் சொல்வதை சத்தமின்றி செயலில் காட்டியவர். புகழ் தேடாமல் பணியில் மூழ்கியவர்.
ஆரம்பக் காலங்களில் அதிக நெருக்கடி சூழ்ந்த நாட்களில் விடுதலைப் போராட்டத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் அமைதியான ஆதரவாக இருந்தவர். அவர் கதைத்ததை விட அவர் செய்தவை அதிகம். அவர் மறைமுகமாக களம் பல ஆடியவர்.
ஈழநாடு பத்திரிகையின் ஆரம்பப் பயணத்தில் அவர் ஒரு பார்வையாளர் அல்ல. எனக்கு ஒரு துணையாக ஒரு தூண்டலாக ஒரு தாங்கு கல்லாக என் பின்னால் நின்ற அந்த அமைதியான சக்தி அவரே.
15 ஆண்டுகளுக்கு முன் போரால் பாதிக்கப்பட்ட தாயகத்தின் குழந்தைகளுக்கு ஈழநாடு பத்திரிகை நாளாந்தம் உணவளித்து வாழ்வளிக்க முன் வந்தபோது வலக்கரமாகச் செயற்பட்டவர் ஈசன் அண்ணா!
15 ஆண்டுகளுக்கு முன்னால் என் இப்பணிக்கு. உதவிக்கரம் நீட்டுவது எளிதல்ல. பலர் ஒதுங்கி நின்ற வேளையில் என் அருகில் துணிச்சலூடு ஈசன் அண்ணா அதை ஒரு கடமையாக அல்ல ஒரு கருணையின் செயலாகக் கருதி நின்றவர்களில் ஒருவர் அவரின் உதவி எனக்கு நம்பிக்கை விதைத்தது. அவரை நினைத்தால் என் மனம் கூறுவது ஒன்று இத்தகைய மனிதர்கள் இழக்கப்படக் கூடாது என்பதே.
ஆனால் வாழ்க்கை அப்படி கேட்காது. அது எடுத்துச் செல்லும் போது மிகச் சிறந்தவர்களையே முதலில் எடுத்துச் செல்கிறது.
ஈசன் அண்ணவின் மறைவு ஒரு குடும்பத்தின் துயரம் மட்டும் அல்ல. ஒரு நண்பனின் இழப்பு மட்டும் அல்ல. ஒரு சமுதாயத்தின் வெற்றிடமாகும்.
எங்கள் நண்பர்கள் வட்டத்தில் மாபெரும் வெற்றிடத்தை ஈசன் அண்ணா விட்டுச் செல்கின்றார். இன்று நாம் இழந்தது ஈசன் அண்ணா என்ற ஒரு உயிரை அல்ல ஒரு நேர்மை. ஒரு அர்ப்பணிப்பு ஒரு இலட்சியம் கொண்ட மானிடனை.
ஈசன் அண்ணா போன்றவர்கள் மண்ணில் மறைந்தாலும் பழகியவர்கள் மனங்களில் மறைய மாட்டார்கள்.
அவரது பாதை அவரது நினைவு அவரது அர்ப்பணிப்பு எப்போதும் நமக்கு வழிகாட்டி யாகவே இருக்கும்.
அவரை இழந்த துயரத்தில் நின்று ஒரு வாக்குறுதி அளிக்கலாம் அவர் நேசித்த விடுதலை அவர் வாழ்ந்த இலட்சியம்
அவர் தாங்கிய தமிழ்த்தேசிய உணர்வு நம்முள் தொடரட்டும்.
அவரது நினைவு நம் நெஞ்சில் ஒரு நிழல் அல்ல ஒரு பாசப் பிணைப்பு
ஈசன் அண்ணா
நீங்கள் மீண்டு வரா உலகிற்குச் சென்று விட்டீர்கள்.ஆனால் நீங்கள் இந்த மண்ணில் விட்டுச் சென்ற நட்பும் – அன்பும் பாசமும் இன்னும் எங்களை வழி நடத்துகிறது! எம் உயிருள்ள வரை உங்கள் நினைவுகள் தொடரும். இறைவன் திருவடியில் நிம்மதியாய் நீடுதுயில் கொள்ளுங்கள். நாம் வரும்போது அவ்வுலகக் கதை சொல்ல நிறையவே கதை வைத்திருங்கள்.









