(கொழும்பு, டிசம்பர் 13, 2025) – இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வரும் சிகுன்குனியா (Chikungunya) காய்ச்சலானது, இதுவரை அடையாளம் காணப்படாத புதிய மரபணு மாற்றத்தைக் (Genetic Mutation) கொண்டிருப்பதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டிசம்பர் மாத விடுமுறைக்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு உலகலாவிய சுகாதார அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (Medical Research Institute – MRI) மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் ஒவ்வாமைப் பிரிவு ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பரவி வரும் வைரஸானது ‘கிழக்கு மத்திய தென்னாப்பிரிக்கா’ (East Central South African – ECSA) வகையைச் சார்ந்தது எனவும், இதில் E1:K211E மற்றும் E2:V264A எனப்படும் புதிய மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றமானது, வைரஸை ஏடிஸ் (Aedes) வகை நுளம்புகள் மூலம் மனிதர்களுக்கு மிக வேகமாகப் பரவச் செய்யும் திறனை அதிகரித்துள்ளது.
குறிப்பாகக் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் இந்தக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான மூட்டு வலி (Joint Pain), அதிக காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் தோல் அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இது டெங்கு காய்ச்சலாகத் தவறாகக் கணிக்கப்படுவதாகவும், ஆனால் மூட்டு வலி நீண்ட நாட்களுக்கு நீடித்து இருப்பது இதன் முக்கிய அறிகுறி எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் இந்தத் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் தைப் பொங்கல் விடுமுறைக்காக கனடா, லண்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் நோயக்கட்டுப்பாட்டு மையம் (CDC) மற்றும் கனேடிய சுகாதாரத் துறை ஆகியவை இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன. குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் இலங்கைக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அல்லது மருத்துவ ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கனடா மற்றும் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட சிகுன்குனியா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது ஒரு சிறந்த தற்காப்பு நடவடிக்கையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
இலங்கைச் சுகாதார அமைச்சு, பாடசாலைகள் மற்றும் பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்பு பெருகும் இடங்களை அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. தாயகம் செல்லும் தமிழர்கள் நுளம்பு கடியில் இருந்து தப்பிக் கொள்ளும் வகையிலான ஆடைகளை அணிவதுடன் (Long sleeves), நுளம்பு விரட்டிகளைப் (Repellents) பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் அல்லது மூட்டு வலி ஏற்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
















