சமூக வலைத்தளங்கள் வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் அல்ல, அவை குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ‘நவீன போதைப்பொருள்’ என்பதை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சிறுவர்களைச் சீரழிக்கும் வகையில் ஆபத்தான அம்சங்களைக் கொண்ட செயலிகளை உருவாக்கியதற்காக மெட்டா (Meta) மற்றும் யூடியூப் (YouTube) ஆகிய நிறுவனங்கள் குற்றவாளிகள் என லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நீதிமன்ற ஜூரிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
சுமார் ஆறு வாரங்களாக நடைபெற்ற இந்த விறுவிறுப்பான வழக்கின் முடிவில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு 6 மில்லியன் டாலர் (சுமார் ₹50 கோடி) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 70 சதவீதத் தொகையை மெட்டா நிறுவனமும், மீதமுள்ள 30 சதவீதத்தை யூடியூப் நிறுவனமும் வழங்க வேண்டும்.
இந்த வழக்கு உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. சிகரெட் நிறுவனங்கள் அதன் பாதிப்பை மறைத்து விற்பனை செய்ததைப் போலவே, இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் ‘அல்காரிதம்’ (Algorithm) சிறுவர்களைப் பாதிக்கும் என்று தெரிந்தே செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்
இந்த வழக்கின் மையப்புள்ளி, நீதிமன்றத்தால் கே.ஜி.எம் (KGM) என்று குறிப்பிடப்படும் 20 வயது இளம்பெண். அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக் கூடியது:
- ஆறாவது வயதிலேயே அடிமை: தனது 6 வயதில் யூடியூப் தளத்திற்கும், 9 வயதில் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்திற்கும் அவர் அடிமையானார்.
- மனநல பாதிப்பு: 10 வயதிற்குள் அவர் கடுமையான மனச்சோர்வுக்கு (Depression) ஆளாகி, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
- உடல் உருவக் குறைபாடு: 13 வயதில் அவருக்கு ‘பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர்’ (Body Dysmorphic Disorder) எனும் மனநோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலி அழகைக் கண்டு தனது தோற்றத்தைப் பற்றி அவர் மிகுந்த தாழ்வு மனப்பான்மை அடைந்ததே இதற்குப் பின்னால் இருந்த காரணம்.
“ஒரு குழந்தையைத் தனது போனிலிருந்து கண்ணை எடுக்க விடாமல் செய்வது எப்படி? அதன் பெயர்தான் ‘அடிமைப்படுத்தும் பொறியியல்’ (Engineering of addiction). அவர்கள் திட்டமிட்டு இந்த அம்சங்களைச் சேர்த்தார்கள். இவை ‘ட்ரோஜன் குதிரை’ (Trojan horses) போன்றவை—பார்க்க அழகாக இருக்கும், ஆனால் உள்ளே அனுமதித்தால் அவை நம் வாழ்வையே அழித்துவிடும்,” என்று கே.ஜி.எம்-மின் வழக்கறிஞர் மார்க் லேனியர் (Mark Lanier) வாதிட்டார்.
நிறுவனங்களின் பிடிவாதமான மறுப்பு
இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “டீன் ஏஜ் பருவத்தினரின் மனநலம் மிகவும் சிக்கலானது, அதை ஒரு செயலியுடன் மட்டும் தொடர்புபடுத்த முடியாது” என்று கூறியுள்ளார். அதேபோல், யூடியூப் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா (José Castañeda) கூறுகையில், “எங்கள் தளம் ஒரு சமூக வலைத்தளமே அல்ல, அது ஒரு ஸ்ட்ரீமிங் தளம்” என்று கூறி மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மெட்டா நிறுவனத்திற்கு இது ‘இடி மேல் இடி’ விழுந்த கதையாக மாறியுள்ளது. மெக்சிகோவில் (New Mexico) நடந்த மற்றொரு வழக்கில், சிறார்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியதற்காக அந்த நிறுவனம் 375 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னோடித் தீர்ப்பு: இனி என்ன நடக்கும்?
அமெரிக்காவில் சுமார் 1,600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் பள்ளிகள் இது போன்ற புகார்களைத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வைத்துள்ளன. அந்தப் பெரும் சட்டப் போராட்டத்திற்கு இந்தத் தீர்ப்பு ஒரு வலுவான அடித்தளமாக (Bellwether trial) அமைந்துள்ளது.
த கார்டியன் (The Guardian) வெளியிட்டுள்ள செய்தியின்படி, வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இது போன்ற மேலும் பல வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. இது தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயலிகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: த கார்டியன் (The Guardian)









