May 29, 2026

தமிழகத் தேர்தலும் நாமும்

தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் சீமானின் அபிமானிகள். இன்னொரு பகுதியினர் விஜயை ஆதரிக்கிறார்கள். லண்டனில் சீமானின் வெற்றியை வேண்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.  அவருடைய கட் அவுட் அங்கே நிறுத்தப்பட்டது.


யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி நல்லூர் போன்ற சந்ததிகளிலும் வேறு சில சந்திகளிலும் சீமானின் கட்அவுட் கள் நிறுவப்பட்டுள்ளன. மானிப்பாயில் சீமானை ஆதரித்து மாட்டுவண்டில் ஊர்வலம் ஒன்று ஒழுங்கு செய்யப் பட்டது. சீமானுக்கு மட்டுமல்ல விஜேக்கும் ஸ்டாலினுக்கும் பதாதைகளை கட்டப்பட்டன.


சீமான் கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும் அந்த இயக்கத்தின் தலைவருடைய முகத்தையும் சின்னங்களையும் தொடர்ச்சியாக தன் அரசியலுக்கு அடித்தளமாக பயன்படுத்தி வருகிறார். ஈழத்தமிழர்கள் தொடர்பில், 2009இற்குப் பின்னரான தமிழகக் கூட்டுஉளவியலில் காணப்படும் குற்றவுணர்ச்சிக்கு அவர் தலைமை தாங்க முயற்சிக்கிறார். அதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டு மல்ல, இந்தப் பிராந்தியத்திலேயே விடுதலைப் புலிகளின் பெயரை தொட ர்ந்து பகிரங்கமாக, பயமின்றி உச்சரிக் கும் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.


விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை உண்டு. வெளிப்படையாக அந்த இயக்கத்தை ஆதரித்தாலோ அல்லது அந்த இயக்கத்தின் லட்சியங்களை பகிரங்கமாக, நேரடியாக மேலுயர்த்தினாலோ இந்தியச் சட்டங்கள் குறிப்பிட்ட நபரின் மீது அல்லது அமைப்பின் மீது பாயும். எனினும் சீமான் அந்த அமைப்பை நினைவு படுத்தும் முகங்களையும் சின்னங்களையும் கோஷங்களையும் தொடர்ந் தும் அரசியல் மேடையில் பேசு பொருளாக வைத்திருக்கிறார்.


அதில் அவர் துணிந்து ரிஸ்க் எடுக்கிறார் என்று ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் நம்புகிறார்கள். அதனாலேயே அவரை ஆதரிக்கிறார்கள். அதேசமயம் அவரை எதிர்ப்பவர்கள் கேட்கிறார்கள், இந்தியாவின் சட்டத் தடையை மீறி எப்படி சீமானால் இப்படி வெளிப்படையாக விடுதலைப் புலிககளை ஆதரிக்க முடிகிறது என்று? எனினும் சீமானின் விசுவாசிகள் மேற்கண்ட கேள்வியைப்  பொருட்படுத்துவதில்லை.


கிடைக்கும் தகவல்களின்படி சுவிற்சர்சலாந்தில் மட்டும் சீமானின் தேர்தல் தேவைகளுக்காக கிட்டத்தட்ட 8 லட்சம் சுவிஸ் பிராங்குகள் சேகரித்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இலங்கைக் காசில் எவ்வளவு தொகை? அது போல ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஏனைய மேற்கத்திய நாடுகளிலும் சீமானுக்கு காசு திரள்கிறது.


சீமான் தனது உள்நாட்டு அரசியல் எதிரிகளை எதிர் கொள்வதற்காக சில சமயங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னங்களையும் முகங்களையும் ஒரு கேடயமாக முன்நிறுத்துவார். அப்பொழுது அவருக்கு மட்டும் அடி விழாது  அந்த இயக்க த்துக்கும் சேர்ந்து விழும்.
தொகுத்துப் பார்த்தால் சீமானுக்கு ஈழத் தமிழர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவு என்பது பெருமளவுக்கு அவருடைய விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டின் வழி கிடைத்ததுதான். மேலும் சீமானின் தற்சார்பு பொருளாதாரம், மக்கள்நேய பொருளாதாரம், பசுமை பொருளாதாரம் போன்று கொள்கைகள் காரணமாகவும் அவருக்கு ஆதரவு உண்டு.


அதேசமயம் நடிகர் விஜய்யின் விசிறிகளும் அவருடைய வெற்றியை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆதரவு கொள்கை வழிபட்டது அல்ல. விஜய் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையிலானதும் அல்ல. அது பெருமளவுக்கு சினிமா ரசிக மனோநிலையில் இருந்து வருவது. தமது அபிமான திரை நாயகன் ஓர் அரசியல் தலைவராகவும் வெற்றிபெற வேண்டும் என்று அவரு டைய விசிறிகள் எதிர்பார்க்கிறார்கள். சீமானை ஆதரிப்பவர்களைப் போல இவர்களிடம் கொள்கை ரீதியான நிலைப்பாடுகள் கிடையாது.


தமிழகத்தில் நடக்கும் ஒரு தேர்தலில் இவ்வாறு இரண்டு தமிழக வேட் பாளர்களை, அவர்களுடைய கட்சி களை ஈழத்தமிழர்கள் ஆதரிப்பது என்பது 2009க்கு பின்னரான வளர்ந்து வரும் ஒரு போக்கு. தாங்கள் வாக்களிக்க முடியாத ஒரு தேர்தலுக்காக உழைப்பது?


இதற்கு முன்னரும் திராவிட கட்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் அபிமானிகள் இருந்தார்கள். திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் அபிமானிகள் இருந்தார்கள். குறிப்பாக எம்ஜிஆருக்கும் வைகோவிற்கும் விஜயகாந்துக்கும் ஆதரவாளர்கள் இருந்தார்கள். அவர்களும் தங்களுடைய அபிமான தலைவர்கள் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் தமிழகத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் இவ்வளவு அதிகரித்த ஆர்வம் காட்டுவதும் அந்த ஆர்வமானது கோடிக்கணக்கான ரூபாய் உதவிகளாக திரள்வதும் கடந்த 2009க்கு பின்னரான ஒரு புதிய போக்குத்தான்.


கடந்த 16ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியலில் நிலவும் தலைமைத்துவ வெற்றிடம், அதனால் ஏற்பட்ட வெளி யாருக்காகக் காத்திருக்கும் அரசியல் என்பவற்றின் விளைவா இது?


தாம் போற்றும் ஓர் இயக்கத்தை தமிழகத்தில் உயர்த்தும் ஒருவரை ஆதரிப்பதும் அல்லது தமது அபிமான திரை நாயகரை ஆதரிப்பதும் அவரவர் விருப்பம். அவ்வாறு ஆதரிக்கவும் அவர் வெல்லவேண்டும் என்று உழைக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அதேசமயம் ஓர் அரசியல் சமூகமாக ஈழத் தமிழர்கள் தமிழகத் தேர்தல்களில் மட்டுமில்லை, இந்திய தேர்தல்களிலும் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண் டும்?


இதில் பிரதானமாக இரண்டு வகை நிலைப்பாடுகளை எடுக்கலாம். ஒன்று கொள்கை வழி நிலைப்பாடு. இரண் டாவது தந்திரோபாய  நிலைப்பாடு.


கொள்கை வழி நிலைப்பாடு என்பது ஏற்கனவே இக்கட்டுரையில் கூறப் பட்டது போல, கொள்கை ரீதியாக ஈழத் தமிழர்களோடு நெருக்கமாகக் காணப்படும் தமிழகக் கட்சிகளை ஆதரிப்பது. தந்திரோபாய  நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாக முடிவெடுப்பது. இதை இன்னும் ஆழமான வார்த்தைகளில் சொன்னால் ஓர் அரசைப் போல சிந்திப்பது.


தமிழகத்திலும் சரி முழு இந்தியா விலும் சரி யார் தலைவராக வர வேண்டும் என்பது அங்குள்ள வாக்காளர்களின் விருப்பம். வாக்காளர்களின் விருப்பப்படி யார் தெரிவு செய்யப்படுகிறாரோ அவர்தான் அங்கே அரசியல் அதிகாரத்தின் மையத்தில் இருப்பார். எனவே ஒரு தேசமாக, ஒரு அரசைப் போல முடிவெடுத்தால் அந்த அதிகார மையத்தைக் கையாள வேண்டிய தேவை, அந்த அதிகார மையத்தோடு என்கேஜ் பண்ண வேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களு க்கு உண்டு. இதில் தமக்கு பிடித்த தலைவர் இருக்கிறாரா, பிடித்த கட்சி இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து ஈழத்தமிழர்கள் உறவாட முடியாது. இந்திய மக்களும் தமிழக மக்களும் யாரைத் தெரிவு செய்கிறார்களோ, அவர்களோடு இடையூடாடுவது. அது தான் ராஜதந்திரம்.


கொள்கை நிலைப்பாடுகளுக்கும் ராஜ தந்திர நிலைப்பாடுகளுக்கும் இடை யில் ஒரு சமநிலையைப் பேண வேண்டியிருக்கும். அரசியலில் பல சந்தர்ப்பங்களில் அறம் சார்ந்த நிலைப் பாடுகளுக்கும் ராஜதந்திர நிலைப்பாடுகளுக்கும் இடையில் சமநிலையைக் காணமுடியாமல் இருக்கும். அப் பொழுது என்ன செய்வது?


உதாரணமாக தமிழ்நாட்டில் திமுக வெல்கிறது என்று வைத்துக் கொண்டால் சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள்  புதிய அரசாங்கத்தோடு தொடர்புகளை வைத்துக் கொள்ள மாட்டார்களா?


ஏன் அதிகம் போவான்? இப்பொழுது சீமானுக்கு கோடிகோடியாக காசைத் திரட்டும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை உண்டு. அந்த நாடுகளில் அந்த அரசின் கீழே தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்கிறார்கள்; உழைக்கி றார்கள்; அதில் ஒரு பகுதியை சீமானுக்கும் கொடுக்கிறார்கள். ஈழத்தமிழ் அரசியல் தொடர்பான மேற்கு நாடு களின் கொள்கை முடிவுகளோடு உடன்பட முடியாது என்பதற்காக யாரும் அந்த நாடுகளில் இருந்து தமது பிரஜா உரிமைகளைத் தூக்கி எறிந்து விட்டு வெளியேறுவதில்லைத் தானே? எனவே நீதியானவர்களிடந் தான் ஈழத்தமிழர்கள் நீதியை எதிர் பார்க்கலாம் என்றால் அல்லது கொள்கை உடன்பாடு உடையவர் களோடு மட்டுந் தான் ஈழத் தமிழர்கள் உறவாடலாம் என்று சொன்னால், அரசு  இல்லாத ஈழத் தமிழர்களுக்கு உலகில் எத்தனை நண்பர்கள் கிடைப்பார்கள்? அவர்களில் எத்தனை பேர் முடிவெடு க்கும் அதிகாரத்தோடு இருப்பார்கள்?


தமிழகத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் ஆர்வம் காட்டலாம். ஆனால், அங்கு யாரை தமிழக மக்கள் தேர்ந்தெடுக் கிறார்களோ, அந்த அரசாங்கத்தோடு ஈழத் தமிழர்கள் ஓர் அரசியல் சமூக மாக எப்படி இடையூடாடுவது என்று சிந்திப்பதே பொருத்தமானது.


ஈழத்தமிழ் அரசியலைப் பேசவேண்டிய நிர்ப்பந்தம் தமிழகத்தில் உண்டு. அதனால்தான் திமுக இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வாக கூட்டா ட்சியை ஆதரிக்கின்றது. விஜய் ஈழத் தமிழர்களின் அரசியலைப் பற்றி அறிக்கையிட வேண்டியுள்ளது. அந்தத் தேவையை வைத்துக் கொண்டு எப்படி புதிய தமிழக அரசுடன் இடையூடாடுவது  என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்கலாம். மேலும் கடந்த பல தசாப்தகால தமிழக தேர்தல் முடிவுகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒருவிடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஈழ ஆதரவு நிலைப்பாடு என்பது தமிழகத் தேர்தல்களில் ஒரு பிரதான தீர்மானிக்கும் சக்தி இல்லை என்பது தான். அவ்வாறு ஈழத்தமிழர் களுக்காக துணிச்சலான முடிவுகளை எடுத்த பல தலைவர்கள் தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெறவில்லை. எனவே தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் எவ்வளவு தீவிரமாக ஈழத்தமிழ் ஆதரவு நிலைப்பாட்டிக் கொண்டிருந்தாலும் அவரால் ஈழத் தமிழர்களுக்கு தனி நாட்டை வாங்கிக் கொடுக்க முடியாது. 


தனிநாடு மட்டுமல்ல 13வது திருத்த த்தை முழுமையாக அமுல்படுத்தச் சொல்லி இலங்கை அரசாங்கத்தின் மீது குறைந்தபட்ச நிர்பந்தங்களைக் கூட பிரயோகிக்க முடியாது. பதிலாக ஈழத் தமிழர்களோடு உணர்வுபூர்வ கூட்டொருமைப்பாட்டை வெளிப்படுத்தலாம். தமிழகம் கொந்தளித்தால் அது புதுடில்லியில் எதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.


இந்திய  அரைக் கூட்டாட்சிக் கட்ட மைப்பிற்குள் வரையறுக்கப்பட்ட அதிகாரங் களைக் கொண்ட ஒரு மாநில முதலமைச்சர் என்ன செய்யலாம் என்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.


தமிழகத்தில் மட்டுமல்ல, ஈழத்தமிழர் கள் அதிக தொகையாக புலம் பெயர்ந்து வாழும் கனடாவிலும் நிலைமை இதுதான். கனடாவில் அமைச்சராக இருக்கும் ஹரி ஆனந்தசங்கரி அங்கே ஈழத்தமிழராக முடிவெடுக்க முடியுமா? அல்லது கனேடிய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமா?


எனவே தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழக மக்களின் விருப்பம் என்பதை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.புதிய தமிழக அரசாங்கத்தோடு எப்படி இடையூடாடுவது என்று சிந்திக்க வேண்டும்.