October 17, 2026

மழைக்காக மந்திர நீரைத் தெளிக்கும் நாட்டில் ஜோதிடர்கள்?

கடந்த வாரம் ஒரு பௌத்த மத குரு விமானப்படை ஹெலிகாப்டரில் பறந்த படி நாட்டின் மீது மந்திரித்த நீரைத் தெளித்தார். பருவ மழைக்காக காத்திருந்த நாட்களில் நாட்டில் நிலவிய வறட்சியை நீக்கி மழையை வர்ஷிக்குமாறு வேண்டி மந்திரித்து அந்த நீர் தெளிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நீர் தெளிக்கப்படுவதற்கு முதல் நாளே கிளிநொச்சியில் மழை பெய்து விட்டது. அடுத்த அடுத்த நாட்களில் யாழ்ப்பாணத்திலும் பொழிந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் மந்திர நீர் தெளிக்கப்படவில்லை.

நாட்டில் இப்பொழுது ஆட்சியில் இருப்பது சீன சார்பு இடது சாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசியமக்கள் சக்தி அரசாங்கம் தான். ஜனாதிபதி கலந்து கொள்ளும் எல்லாப் பொது நிகழ்வுகளிலும் பௌத்த மத குருக்களின் கால்களில் விழுகிறார். முழந்தாழட்டு அவர்களுடைய மந்திரித்த நூலை கைகளில் கட்டிக்கொள்கிறார். அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். நாட்டு மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதற்காக அவர் நடிப்பதாகவும் இருக்கலாம்.

ஆனால் அவருடைய முதிய எளிமையான தாயாருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அனுர சிறுவனாக இருக்கும் பொழுது அவரை மகா சங்கத்தில் சேர்க்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது. அக்காலகட்டத்தில் தாயார் ஒரு சோதிடரை கண்டிருக்கிறார்.ஜோதிடர் சொல்லியிருக்கிறார் உங்களுடைய மகன் எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக வருவார் என்று.

எனது நண்பர் ஒருவர் கேட்டார் அந்த ஜோதிடர் இப்பொழுதும் உயிருடன் இருக்கிறாரா? அவரைப் போய்க் காணலாமா? என்று. ஆனால் அந்த ஜோதிடரும் ராஜபக்சக்களுக்கு நெருக்கமாக இருந்த ஞானக்கா என்ற ஜோதிடரும் ஒருவர் அல்ல. பல தசாப்தங்களுக்கு முன்னரே அனுர ஜனாதிபதியாக வருவார் என்று அவர் மிகச் சரியாக சாத்திரம் சொல்லியிருக்கிறார்.

அனுரவின் தாயார் மட்டுமல்ல இலங்கைத் தீவை ஆட்சி செய்த பண்டாரநாயக்கா குடும்பத்துக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு.அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவரும் வி.பொன்னம்பலத்தின் கட்சியில் செயலாளராக இருந்தவருமான சிவா.சுப்பிரமணியம் 1991இல் ஒரு தனிப்படட உரையாடலில் பண்டாரநாயக்கா குடும்பத்தின் ஜோதிட நம்பிக்கை தொடர்பாக ஒரு விடயத்தைச் சொன்னார்.

ஒருமுறை யாழ்தேவி புகையிரதத்தில் சிவா.சுப்பிரமணியம் பயணம் செய்திருக்கிறார்.அவரோடு கைலாசநாதர் குருக்களும் பயணம் செய்திருக்கிறார்.குருக்கள் நன்றாக ஜாதகம் பார்ப்பார். பயண வழியில் இருவரும் நெருக்கமாக உரையாடியபோது குருக்கள் பண்டாரநாயக்கா குடும்பத்தின் சாதகங்களை தான் பார்த்தது பற்றிக் கூறியிருக்கிறார்.அவர் அந்தச் சாதகங்களைப் பார்த்தது கிட்டத்தட்ட 1970களில்.

அந்தச் சாதகங்களின்படி அக்குடும்பத்தின் ஆண் வாரிசு ஆகிய அனுரா பண்டாரநாயக்க என்றைக்குமே தலைவராக வர மாட்டார் என்றும் மூத்த மகள் சுனித்திரா பெருமளவுக்கு அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும் இரண்டாவது மகளாகிய சந்திரிகாதான் அரசியலில் வெற்றி பெறுவார் தலைவியாக வருவார் என்றும் குருக்கள் கூறியிருக்கிறார்.

இதை சிவா.சுப்பிரமணியம் எனக்கு நினைவூட்டியது 1991இல் அப்பொழுது சந்திரிக்கா முதலமைச்சராகவும் வந்திருக்கவில்லை. சிவா சுப்பிரமணியம் இடதுசாரி மரபில் வந்தவர். ஆனால் மக்களின் பண்பாட்டு நம்பிக்கைகளை மதிப்பவர்.ஜோதிடத்தில் அவருக்கு பெரிய அளவு நம்பிக்கை இல்லை.எனினும் சில தசாப்தங்களுக்கு முன் கைலாசநாத குருக்கள் பண்டாரநாயக்கா குடும்ப சாதகங்களை எப்படிக் கணித்திருக்கிறார் என்று கூறினார்.

அனுரவின் தாயார் பண்டாரநாயக்கா குடும்பம் போன்றவர்கள் மட்டுமல்ல. சிங்கள பௌத்த அரசியலில் மேட்டுக்குடிகளை பிரதிபலித்த பெரும்பாலான தலைவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக மந்திரம் தந்திரம் ஜோதிடம் பில்லி சூனியம் போன்றவற்றை நம்புகின்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.

உதாரணமாக மஹிந்த ராஜபக்ச.கடந்த 12-ம் திகதி அவர் அனுராதபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது நாமல். ஆனால் கூட்டம் நடப்பதற்கு முன்னரே அரசாங்கம் அவரைத் தூக்கி உள்ளே போட்டு விட்டது. அதனால் அந்தக் கூட்டத்துக்கு மகிந்த தலைமை தாங்க வேண்டி வந்தது. அந்தக் கூட்டத்தில் மஹிந்த பேசவில்லை. ஆனால் மக்களை நோக்கி கைகளை அசைக்கும் பொழுது அவருடைய ஒரு உள்ளங்கைக்குள் ஏதோ ஒரு பொருளை அவர் இறுக்கிப் பிடித்திருப்பது தெரிகிறது. அந்தப் பொருள் என்ன என்பதைக் குறித்து சமூகஊடக வலைத்தளங்களில் ஆராய்ச்சி நடந்தது.

அந்தப் பொருள் மகிந்தவின் கைக்குள் காணப்படுவது அது தான் முதல் தடவை அல்ல.அவர் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வரும் போதெல்லாம் அந்தப் பொருளை கைக்குள் வைத்திருப்பார். உதாரணமாக பல தசாப்தங்களின் பின் யாழ்தேவி புகையிரதம் யாழ்ப்பாணத்துக்கு வந்தபொழுது அந்த விழாவில் மஹிந்த காணப்பட்டார். அதில் அவர் கைகளை உயர்த்தி அசைக்கும் பொழுது மேற்படி பொருள் அவருடைய கைக்குள் காணப்பட்டது. அதை அப்பொழுது எடுத்த ஒளிப்படங்களில் காணலாம்.

அது என்ன பொருள்? அது ஒரு மந்திரித்த வஜ்ராயுதம் என்று கூறுகிறார்கள். அதை வைத்திருப்பவரை அது ஆபத்துகளில் இருந்தும்,பில்லி சூனியம்,ஏவல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.

இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசியல்வாதிகளில் அதிகம் ஆபத்துக்குள்ளாகக்கூடிய ஒருவர் அவர். ஏனென்றால் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர். எனினும் போர் வெற்றிகளைக் கொண்டாடிய பின்னரும் அவர் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறார். யாரிடமிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக அந்த மந்திரித்த வஸ்துவை கைக்குள் கொண்டு திரிகிறார்? தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆன பின்னரும் சிங்களமக்கள் மத்தியில் வெற்றி நாயகராகக் கொண்டாடப்படும் ஒருவர் பயத்திலிருந்து விடுபடவில்லை என்பதனை அது குறிக்கிறதா?

மஹிந்த ராஜபக்ஷ போன்ற சிங்கள பௌத்தர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவராகிய ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அப்படிப்பட்ட நம்பிக்கைகள் உண்டு. அவர் பதவிப் பொறுப்புகளில் இருந்த காலகட்டங்களில் இந்தியாவுக்கு குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போவார்.அங்கே ஒரு தராசில் அவருடைய மொத்த எடைக்கு சமமான நேர்த்திப்பொருளை வைத்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்வார் என்று செய்திகள் தெரிவித்தன.

எனவே சிங்கள பௌத்த அரசாட்சியின் மத நம்பிக்கைகளின் பிரிக்கப்படவையில்லாத பகுதியாக ஜோதிடம் மந்திரம் தந்திரம் பில்லி சூனியம் போன்றவை காணப்படுகின்றன.தோழர்களின் ஆட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேற்கண்டவை யாவும் தென்னிலங்கை உதாரணங்கள்.அது போல தமிழ் அரசியலிலும் வருங்காலத்தை உரைத்த சோதிடர்கள் உண்டா? சோதிடம்,மந்திரம்,தந்திரம்,பில்லிசூனியம் போன்றவற்றை நம்பும் அரசியல்வாதிகள் உண்டா?

ஆயுதப் போராட்டத்தில் நிகழ்ந்த சில தாக்குதல்கள் எண் சோதிட முறைப்படி நாட் குறித்து நடத்தப்பட்டவை என்ற ஒரு நம்பிக்கை பரவலாக இருந்தது. அவ்வாறு வெற்றி பெற்ற தாக்குதல்கள் பலவற்றின் திகதிகள் ஐந்தாம் இலக்கத்துக்குரியவை என்றும் கருதப்பட்டது. இதைவிட வித்தியாசமான அதே சமயம் நம்பக் கடினமான ஒர் உதாரணத்தை இங்கே கூறலாம்.

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் கிளிநொச்சியில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு பொறுப்பாக ஓர் இத்தாலியர் இருந்தார். இவருக்கு தமிழ் நண்பர்கள் உண்டு. இவரும் விரும்பித் தமிழைக் கற்றார். 2007 ஆம் ஆண்டு இவர் தனது தமிழ் ஆசிரியரிடம் கேட்டார். இங்கே யாராவது நல்ல ஜோதிடர்கள் உண்டா என்று. ஏன் என்று கேட்டபோதுஅவர் சொன்னார் பல ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்தில் ஒரு பெண் பௌத்த மதகுருவிடம் எனது கையைக் காட்டினேன். அவர் எனது கையைப் பார்த்து விட்டுச் சொன்னார் தீவாக உள்ள ஒரு நாட்டில் வேறு இன அல்லது வேறு மதப் பெண்ணை திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டு என்று. அது உண்மை தானா என்பதனை மீள உறுதிப்படுத்துவதற்குத்தான் இங்கே யாராவது ஜோதிடர்கள் கிடைப்பார்களா என்று தேடுகிறேன் என்று அந்த இத்தாலியர் சொன்னார்.

அவருடைய நண்பர் அப்பொழுது புதுக்குடியிருப்பில் பிரபல்யமாக இருந்த ஒரு ஜோதிடரிடம் அவரை அழைத்துச் சென்றார். அந்த ஜோதிடர் பல ஆண்டுகளுக்கு முன் பௌத்த பிக்குணி சொன்னதை மீள உறுதிப்படுத்தினார். அதன்பின் அவரை அழைத்துச் சென்ற ஆசிரியரிடம் கேட்டார் நீங்கள் எதையாவது கேளுங்கள் என்று.

ஆசிரியர் தனிப்பட்ட முறையில் எதையும் கேட்பதற்கு மறுத்துவிட்டார். எனினும் ஜோதிடர் வற்புறுத்திக் கேட்டார் எதையாவது கேளுங்கள் என்று. முடிவில் ஆசிரியர் இப்பொழுது நடக்கும் யுத்தத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று பொதுவாகக் கேட்டார்.

அதற்கு அந்த ஜோதிடர் சொன்னார் 009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதியோடு வன்னிப் பெருநிலப் பரப்பில் உள்ள பெரும்பாலானவர்கள் இடம்பெயர வேண்டி வரும். அதே ஆண்டு மே மாதம் நடுப்பகுதியோடு போர் முடிவுக்கு வந்துவிடும். அதே ஆண்டு ஐப்பசி மாதம் எல்லாமே முடிவுக்கு வந்து விடும் என்று. 2009 நடுப்பகுதியளவில் போர் முடிவுக்கு வரும் என்பதனை அந்த ஜோதிடர் 2007ஆம் ஆண்டிலேயே கூறினார். 2009 ஐப்பசி மாதம் என்று அவர் எதைக் கருதினாரோ தெரியவில்லை.

ஆனால் அது மிகத்துல்லியமான கணிப்பு.அந்த ஆசிரியரும் வெள்ளைக்காரரும் அதை இப்பொழுதும் வியப்போடு நினைவு கூர்வார்கள். ஜோதிடத்தை நம்புகிறவர்களுக்கு இது ஆர்வமூட்டலாம். அரசியலை ஜோதிடத்துக் கூடாக அணுக விரும்பாதவர்கள் இதை நிராகரிக்கலாம். ஆனால் மந்திரித்த நீரைத் தெளித்தால் மழை வரும் என்று நம்பும் மக்கள் அதிகளவு வாழும் ஒரு நாட்டில் வஜ்ராயுதத்தைக் கையில் வைத்திருந்தால் பகைவர் தன்னை நெருங்க முடியாது என்று தலைவர்கள் நம்பும் ஒரு நாட்டில் ஜோதிடத்துக்கும் ஜோதிடர்களுக்கும் எப்பொழுதும் மதிப்பு இருக்கும். முக்கியத்துவமும் இருக்கும். சில ஜோதிடர்கள் அரச போகத்தை அனுபவிக்கும் அளவுக்கு தலைவர்களுக்குக் கிட்டவாக இருப்பார்கள். அதனால்தான் சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் நடந்த நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் போது தலைவர்களைத் துரத்திய சிங்கள மக்கள் அனுராதபுரத்தில் ராஜபக்சங்களுக்கு நெருக்கமானவர் என்று நம்பப்பட்ட ஞானக்கா என்ற ஜோதிடரையும் துரத்தினார்கள்.

– நிலாந்தன்