September 13, 2026

சாமி தூக்கச் சம்பளம் கொடுக்கும் ஒரு சமூகத்தில் காசைக் கொட்டும் உபயகாரர்?

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் கோவிலில் இரவுத் திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட ஒளிச்செறிவுமிக்க மின் குமிழ்களினாலும்,வான வேடிக்கையில் வெளிப்பட்ட புகையினாலும் பக்தர்களின் விழிகள் பாதிக்கப்பட்டன. இந்தச் செய்தியின் சூடு அடங்க முன்னரே கிளிநொச்சி ராமநாதபுரம் புதுக்காட்டு அய்யனார் கோவில் காணொளிகள் வெளி வந்தன. அந்த காணொளிகளில் தேர்த் திருவிழாவில் சிங்களப் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். ஒரு புறம் கோவில்களில் சாமி தூக்குவதற்கு இளையவர்கள் இல்லை. ஆனால் இன்னொருபுறம் வான வேடிக்கைகள், வண்ண ஒளி வினோதங்கள், அழகிகளின் நடனங்கள், செண்டை மேளக் கச்சேரிகள், சின்ன மேளக் கச்சேரிகள், சரிகமப, சூப்பர் சிங்கர் கலைஞர்களின் இசைக்கச்சேரிகள் போன்றவற்றில் தாராளமாக இளைஞர்களைக் காணக்கூடியதாக உள்ளது.

தீவுப் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஆலயத்தை பரிபாலிப்பவர் சொன்னார், திருவிழா காலங்களில் சாமி தூக்குவதற்கு அயல் கிராமத்தில் இருந்து காசு கொடுத்து ஆட்களை அழைத்து வருவதாக. அதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப் படுகிறது. சூரன் போரின் போதும் சூரனைக் காவிக் கொண்டு ஓட அவ்வாறு ஆட்களைச் சம்பளத்துக்குக் கொண்டு வருவதாக அவர் சொன்னார். சில கோவில்களில் சாமி தூக்க ஆளில்லாத போது இசை நிகழ்ச்சிக்கு வரும் இசைக்குழுவைச் சேர்ந்தவர்கள் சாமி தூக்குவதும் உண்டு.

இவ்வாறு காசு கொடுத்துச் சாமி தூக்கும் ஒரு காலகட்டத்தில் காசைக் கொட்டி இசை நிகழ்ச்சிகளும் நடன நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. அண்மையில் வடமராட்சிக்குப் போய்விட்டு இரவுவேளை திரும்பிக் கொண்டிருந்தேன். பருத்தித்துறை வீதியில் கிட்டத்தட்ட ஆறு இடங்களில் வீதி நீட்டுக்கும் ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் திருவிழாக்கள் இரவில் ஒளி வெள்ளத்தில் இசை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன. உதாரணமாக யாழ்ப்பாணம் கலிகைக்கந்தன் ஆலயத்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட இசைக் குழுவுக்கு கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதுபோல மூத்த விநாயகர் ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்ட இசை குழுவுக்கு ஒரு கோடிக்கு மேல் செலவழிக்கப் பட்டதாக ஒரு தகவல் உண்டு. வவுனியாவில், நரசிம்ம வைரவர் ஆலயத்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக ஒரு தகவல். உள்ளூர் இசைக் குழுக்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு கிட்டத்தட்ட 5லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.

சரிகமப, சூப்பர் சிங்கர் பாடகர் பாடகியருக்கு சம்பளமாக கிட்டத்தட்ட ஒன்றை லட்சம் கொடுக்க வேண்டும். இது உள்ளூர் சரிகமப பாடகர்களுக்கும் பொருந்தும். நிகழ்ச்சி நடக்கும் மேடையின் அளவுக்கு ஏற்ப மேடைக்கு செலவாகும். அது சராசரியாக 40ஆயிரம் ரூபாயிலிருந்து பல லட்சங்கள் வரை வரும். மேடையின் அளவுக்கேற்ப ஒலி ஒளி சேவைகளுக்கான செலவும் அதிகரிக்கும். மேடையின் ஒளி அலங்காரம், ஒளி வினோதங்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ப காசு கூடும். எத்தனை எல்ஈடி மின் குமிழ்கள் பயன்படுத்தப்படுகின்றன கோவில் திருவிழாவை ஒரு குறி காட்டியாகப் பயன்படுத்துகிறார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் என்பதைப் பொறுத்து காசும் கூடும். லட்சங்களை கொட்டி ஆடிப்பாடிக் கொண்டாட ஒரு தொகுதி கோவில் நிர்வாகங்களும் உபயகாரர்களும் தயாராக இருக்கிறார்கள். உபயகாரர்களில் உள்ளூர் பணக்காரர்களும் புலம் பெயர்ந்து வாழும் பணக்காரர்களும் உண்டு. புலம்பெயர்ந்த காசில் மிதப்பவர்களும் உண்டு. உபயகாரரின் நிதிக்கொள்ளளவும் அவருடைய ரசனை மட்டமும் நிகழ்ச்சியின் கலைத்தரத்தைத் தீர்மானிக்கின்றன.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட, ராமநாதபுரம் புதுக்காட்டு அய்யனார் கோவிலில் தென்னிலங்கை நடனக் குழுவை அழைத்துக் கொண்டு வந்தவர் கனடாவில் வசிக்கும் ஒரு புலம் பெயர்ந்த தமிழர் ஆவார். சிறிய குடிலாக இருந்த அக் கோவிலை பெரிதாக்கியவர் அவர். அதனால் அவர் கோவில் நிர்வாகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவு க்குப் பலமாகக் காணப்படுகிறார். அன்றைக்கு தேர் பின்னேரம் நாலு மணிக்கு இழுக்கப்பட்டதே அவருடைய விருப்பத்தின்படி தான் என்று கூறப்படுகிறது. தேர் வெளி வீதி சுற்றும் போது அவருடைய வீட்டின் வழியாகவும் செல்லும். தேர் கோவில் வந்து சேர நான்கு மணித்தியாலங்களாவது எடுக்கும் என்று ஓர் ஊர்காரர் சொன்னார். அந்த உபயகாரருக்கும் அருகில் உள்ள வான்படைத் தளத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையே நல்லுறவு உண்டு என்று கருதப்படுகிறது. தென்னிலங்கையில் இருந்து நாட்டியக் குழுக்களை கொண்டு வருவதற்கு அந்த வான்படை முகாமின் பொறுப்பதிகாரியும் உதவியதாக ஒரு கதை உண்டு.

உபயகாரர்கள் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் உபயகாரர்கள் ஊரில் தங்களுடைய செல்வச் செழிப்பைக் காட்டுவதற்கு ஊர்க் கோயிலை கோவில் திருவிழாவை ஒரு குறி காட்டியாகப் பயன்படுத்துகிறார்கள். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் ஒரு மேடையில் வைத்துக் கேட்டார், புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் உள்ளூரில் ஒரு மரத்தின் கீழ் சிறு குடிலாக இருந்த கோவில்களை பெருங்கோவில்களாகக் கட்டி எழுப்புகிறார்கள். ஆனால் அவற்றை அவர்களுடைய அடுத்தடுத்த தலைமுறை பராமரிக்குமா? என்று. யாழ்ப்பானத்தின் உட்கிராமங்களில் அவ்வாறு புனரமைக்கப்பட்ட பல ஆலயங்கள் திருவிழா நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் குப்பை சேர்ந்து அசுத்தமாக காணப்படுகின்றன என்று சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சொன்னார். கோவில்களைப் புனரமைத்து விட்டு புலம்
பெயர்ந்த தமிழர் திரும்பிச் சென்றுவிடுவார். ஊரில் கோவில்களைக் கூட்டித் துப்புரவாக்கிப் பராமரிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் இல்லை. இதனால் பல கோவில்கள் சுத்தமாகப் பேணப்படுவதில்லை.

புலம் பெயர்ந்த ஊர்க்காரரின் நிதிப்பலம் ஆலய நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது. ஆலய நிர்வாகம் அல்லது அறக்கட்டளை சீர்குலையும் போது அங்கே காசு அதிகாரம் செலுத்துகிறது. ஒன்றுக்கொன்று எதிரான குழுக்கள் தோன்றுகின்றன. கோயில் நீதிமன்றத்துக்குப் போகின்றது. மட்டக்களப்பில் மட்டும் 80க்கும் குறையாத கோயில்கள் நீதிமன்றத்தில் நிற்பதாக அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவர் சொன்னார். யாழ்ப்பாணத்தில் அதை விட அதிகமா? ஆனால் எல்லாக் கோவில்களிலும் நிலைமை அப்படியில்லை என்று உள்ளூர் இசைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். சில கோவில்களில் நிர்வாகம் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்றும், இதைத் தான் பாட வேண்டும் இதைப் பாடக்கூடாது என்று தங்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மாறாக எங்கே கோவில் நிர்வாகம் சீராக இல்லையோ அல்லது குழுக்களாகச் சிதறிக் கிடக்கிறதோ அங்கே காசுடைய உபயகாரர் முடிவு களை எடுப்பவராகக் காணப்படுகிறார்.

ஏனைய மதங்களைப் போலன்றி இந்து மதம் ஒரு மைய நிர்வாகத்தைக் கொண்டது அல்ல. அது பேரரசன் இல்லாத பேரரசு. எனவே ஆலய அறக் கட்டளைகளையும் உள்ளூர்க் கோவில் நிர்வாகங்களையும் ஒரு மையத்தில் இணைக்கும் சமயக் கட்டமை
ப்பு எதுவும் இல்லை. இதனால் கோவில் நிர்வாகங்கள் அவற்றின் பலம் பலவீனத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கின்றன.

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானம் 43 ஆண்டுகளாக மகளிர் இல்லத்தை நடத்தி வருகிறது. இங்கே வளர்க்கப்பட்ட பிள்ளைகள் 26 பேருக்கு இதுவரை திருமணம் செய்து கொடுத்திருக்கிறது. அவர்களின் 14 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பார்வை இழந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்களுக்கும் ஒவ்வொரு மாதமும் நிதி உதவி செய்கிறது. அண்மையில் ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அன்னசத்திர மடம் ஒன்றைக் கட்டித் திறந்திருக்கிறது. எட்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அன்னசத்திர மடமானது அறநெறி வகுப்புகளுக்கு எப்பொழுதும் திறக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரமம் புன்னாலைக் கட்டுவன் வடக்கில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த 24 ஆம் திகதி, அங்கே பால் காய்ச்சப்பட்டது. செல்வச் சன்னதி ஆலயம் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் செய்
கிறது. நயினாதீவு நாக©சணி அம்மன் ஆலயமும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கு கணக்கானவர்க்கு அன்னதானம் செய்கிறது. மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோவிலின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்விக் கட்டமைப்பானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவ முகாம்களை நடாத்தி வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. மேலும் கட்புரை நோயாளிகளுக்கு இலவசமாக சத்திர சிகிச்சைகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதுவரை 200க்கும் குறையாதவர்கள் அதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

உள்ளூரில் சிறிய கோவில்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் அன்னதானம் செய்கின்றன.சில ஆலய அறக்கட்டளைகள் முன்பள்ளிகளை நிர்வாகிக்கின்றன. இப்படிப் பல முன்னுதாரணங்கள் உண்டு. சாமி தூக்குவதற்கு சம்பளம் கொடுக்கும் ஒரு சமூகத்திலே,த திருவிழாக்களை ஒளி வெள்ளத்திலும் இசை வெள்ளத்திலும் மூழ்கடிக்கும் உபயகாரர்கள் மத்தியிலே மேற்கண்ட முன்னுதாரணங்களும் உண்டு.

கோவில் நிர்வாகங்கள் ஆலய அறக்கட்டளை கள் போன்றன அவற்றின் பிரயோக அர்த்தத்தில் உள்ளூர் தலைமைத்துவம்தான். லோக்கல் லீடர்ஷிப் பலமாக இல்லையென்றால் கீழிருந்து மேல் நோக்கி தேசிய மட்டத் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இதை மறுவள மாக விளங்கப்படுத்தினால், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்றால் உள்ளூர் தலைமைத்துவத்துக்கும் இரண்டாம் மூன்றாம கட்டத் தலைமைத்துவத்துக்கும் முன்னுதாரணம் இருக்காது. ஆதர்சங்கள் இருக்காது.
ஈழத் தமிழ்ச் சமூகத்தில் அது தான் இப்பொழுது நடக்கின்றது. பெரிய கட்சி தனக்குள் தானே பிரச்சினை யைத் தீர்க்க முடியாமல் நீதிமன்றத்தின் நிற்கிறது. அது அடுத்தடுத்த மட்டத் தலைமைத்துவங்களுக்கு முன்னு தாரணமாக இல்லை. அதே போல சில ஆலய அறக்கட்டளைகளும் திருச் சபைகளும் நீதிமன்றத்தில் நிற்கின்றன. அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி”.