May 29, 2026

தமிழக முதல்வராக யார் வந்தால் நல்லது?

நாளை அதாவது இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்பட்ட அடுத்த நாள் தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும். அதில் யார் வெல்வார்கள் என்பது இக் கட்டுரையின் மையப்பொருள் அல்ல.யார் வென்றாலும் அவர்களால் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்யமுடியும்? என்பதும் யார் வென்றாலும் அவரை ஈழத் தமிழர்கள் எவ்வாறு அணுகவேண்டும்? என்பதும் தான் இன்று இக்கட்டுரையின் குவிமையமாகும்.

தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி. அது இந்தியாவின் அரைச் சமஸ்டி (Quasi-federal) கட்டமைப்புக்குள் வரும் ஒரு மாநிலம். அங்கே முதலமைச்சருக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள்தான் உண்டு. மிகக் குறிப்பாக வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. அதே சமயம் தமிழக பெருந்திரள் மக்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்தளித்தால் அதன் மூலம் ஈழத் தமிழர்கள் தொடர்பான மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் எதோ ஒரளவுக்குச் செல்வாக்குச் செலுத்தலாம்.

எனினும் இந்திய மாநிலம் ஒன்றின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் என்ன செய்ய முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எம்ஜிஆரின் கடைசிக் காலம் ஆகும்.

எம்ஜிஆர் தமிழக முதலமைச்சர் ஆக இருந்த காலகட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி செய்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம். அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உத்தியோகபூர்வமற்ற விதத்தில் செய்த உதவிகள் எவையெவை என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் சொன்னால் மட்டும் தான் தெரியும். அந்த அளவுக்கு எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருக்கும் இடையே தனிப்பட்ட மதிப்பார்ந்த உறவு ஒன்று இருந்தது.

தமிழக அரசியல் தலைவர் ஒருவருக்கும் ஈழத் தமிழ் அரசியல் தலைவர் ஒருவருக்கு இடையில் அப்படி ஓர் உறவு,நெருக்கம் இதற்கு முன்னர் இருந்ததில்லை. அதற்குப் பின்னரும் இருக்கவில்லை. கலைஞர் மு.கருணாநிதிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான உறவைத் தீர்மானித்த காரணிகளில் இந்த நெருக்கமும் ஒன்று.

இந்திய-இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட காலகட்டத்தில் எம்ஜிஆர் நோய் வாய்ப்பட்டிருந்தார். தானாக எழுந்து நடமாடச் சிரமப்பட்டார். இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்ட பின் தமிழகத்தில் ஒரு பெரிய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு எம்ஜிஆர் அழைத்து வரப்பட்டிருந்தார். மேடையில் அமர்ந்திருந்த அவரை ராஜீவ் காந்தி கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்து கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன் நிறுத்தினார்.

அதன்பின் தன் கையால் எம்ஜிஆருடைய கையைத் தூக்கி இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு அவர் சம்மதம் தெரிவிக்கின்றார் என்று அங்கு வந்திருந்த மக்கள் பொருள் கொள்ளத் தக்க விதத்தில் எம்ஜிஆரின் கையை அசைத்தார். அது எம்ஜிஆரின் உடல் இயலாமையை மட்டும் குறிக்கவில்லை. அரசியல் இயலாமையையும் அரசியலமைப்பின் அடிப்படையில் அவருக்கு இருந்த இயலாமைகளையும் உணர்த்திய ஒரு செயல் .

தான் மிகவும் நேசித்த ஒரு விடுதலை இயக்கம். தனது தனிப்பட்ட உதவிகளால் வளர்ந்த ஒரு விடுதலை இயக்கம். தனது இறுதிக் காலகட்டத்தில் தனது நாட்டின் படையினரோடு மோதும் ஒரு நிலைமை உருவாகி வருவதை தடுக்க எம்ஜிஆரால் முடிவதில்லை. அவருடைய கட்சியும் அவருக்கு பின் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவரைப் போல நடக்கவில்லை.

எம்ஜிஆரால் முடியாத ஒன்றை இனி எந்த ஒரு முதலமைச்சரும் செய்துவிட முடியாது என்பது தான் தமிழக யதார்த்தம். ஏனென்றால் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் அதாவது இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். அதேசமயம் ஈழ விடுதலை இயக்கம் ஒன்றின் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமானவர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தாயகத்துக்கு வெளியே அதிகம் உதவிய ஒர் அரசியல் தலைவராக அவரைத்தான் குறிப்பிடலாம். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆராலேயே இந்திய-இலங்கை உடன்படிக்கை மீது நிர்ணயகரமான விதத்தில் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. அந்த உடன்படிக்கையின் பின்னரான விளைவுகளைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை .

ஏனென்றால் எம்ஜிஆர் இந்திய மாநிலம் ஒன்றின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக் கொண்ட ஒரு முதலமைச்சர். இது கருணாநிதிக்கும் பொருந்தும்.ஜெயலலிதாவுக்கும் பொருந்தும். நாளை தெரிவு செய்யப்படப் போகும் புதிய முதலமைச்சருக்கும் பொருந்தும்.

ஒரு கற்பனையாக புதிய முதலமைச்சராக சீமான் தெரிவு செய்யப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு முதலமைச்சராக அவர் எதுவரை போக முடியும்? ஈழத் தமிழர்களுக்கு தமிழ் ஈழத்தை தங்கத்தட்டில் வைத்துத் தந்து விட முடியுமா? முடியாது. மிஞ்சிமிஞ்சிப் போனால் ஈழத்தமிழர்களுக்காக தனது பதவியைத் துறக்கலாம். அவர் செய்யக்கூடிய ஆகப்பெரிய தியாகம் அதுதான்.

அதைவிட முக்கியமாக கடந்த 16 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்காக அவர் முன்னெடுத்த பெருந்திரள் போராட்டங்கள் எத்தனை? 2009க்கு முன் போர்க்காலங்களில் ஈழத்தில் நடக்கும் இனஅழிப்புக்கு எதிராக தமிழகத்தவர்கள் தீக்குளிப்பார்கள். பெருந் திரளாகக் கொந்தளிப்பார்கள். அப்படிப்பட்ட பெரிய போராட்டங்களை கடந்த 16 ஆண்டுகளில் யாரும் செய்ய முடியவில்லை. சீமானும் உட்பட. இதுதான் தமிழக யதார்த்தம்.

சீமானுக்காக காசு சேகரித்து அனுப்பும் ஈழத் தமிழர்களில் எத்தனை பேர் இதுவரை தங்களுக்காக தீக்குளித்த 19பேரின் குடும்பத்துக்கு உதவி செய்திருக்கிறார்கள்? எனவே தமிழகத்தின் முதலமைச்சராக யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் இந்திய அரசியலமைப்பின் வரையறைகளுக்கு உட்பட்டவர்தான். அப்படியென்றால் புதிதாகத் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரின் விடயத்தில் ஈழத்தமிழர்கள் என்ன செய்யலாம் ?

முதலாவதாக அங்கே யார் தெரிவு செய்யப்பட்டாலும் அவரோடு ஈழத் தமிழர்கள் இடையூடாட வேண்டும். ஏனென்றால் அவர் தமிழக மக்களின் விருப்பத் பிரிவு. அவர் தமிழக மக்களின் தலைவர். எனவே ஈழத் தமிழர்கள் தமிழக மக்களின் விருப்பங்களை மதிக்க வேண்டும். யார் முதலமைச்சராக வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தமிழகத்துக்கு மட்டுமல்ல முழு இந்தியாவுக்கும் பொருந்தும். புதுடில்லியில் யார் தெரிவு செய்யப்பட்டாலும் ஈழத்தமிழர்கள் அவர்களோடு இடையூடாடித்தான் ஆகவேண்டும்.

அதேசமயம் தமிழகத்தில் யார் முதலமைச்சராக வந்தாலும் தமிழகம் கொந்தளித்தால் அதாவது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் பெருந்திரளாக ஆர்ப்பாட்டங்களைச் செய்தால் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அதை சுதாகரித்துக் கொள்ளவேண்டி இருக்கும். எனவே அரசியல் தலைமைகளுக்கும் அப்பால் தமிழக மக்களை எப்படி ஈழத் தமிழர்களுக்காக கொந்தளிக்க வைப்பது, நொதிக்க வைப்பது என்று ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இங்கேயும் ஓர் அடிப்படைக் கேள்வி உண்டு. தமது அரசியல் இலக்குகளுக்காக தாமே கொந்தளிக்காமல் இருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தமிழ்நாட்டு மக்கள் தமக்காகக் கொந்தளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?

ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் தலைவர்கள் சிறிய உதிரியான போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். தவிர தொடர்ச்சியான பெருந்திரள் போராட்டங்களை முன்னெடுக்க முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள். கடந்த 16 ஆண்டுகளிலும் அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட “எழுத தமிழ்” “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி” போன்ற போராட்டங்களை அரசியல் கட்சிகள் மட்டும் தனியாக முன்னெடுக்கவில்லை. அங்கே புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் குடிமக்கள் சமூகங்கள் போன்றவற்றின் வலிமையான உதவியும் வழிகாட்டலும் இருந்தன.

எனவே முதலில் ஈழத் தமிழர்கள் தாங்கள் தமது அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொந்தளிக்க வேண்டும். நொதிக்க வேண்டும். போராட வேண்டும். தமது விடுதலைக்காக ஈழத் தமிழர்கள் தாங்கள் தான் போராட வேண்டும். கொந்தளிக்க வேண்டும்.அப்பொழுதுதான் தமிழகம் கொந்தளிக்கும்.

தமிழகத்தில் யார் முதலமைச்சராக வந்தாலும் அவருக்கு இருக்கும் வரையறைகளை ஈழத்தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.இது முதலாவது. அவர் தமிழக மக்களின் விருப்பம் என்பதை ஈழத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது இரண்டாவது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் கொந்தளித்தால் அது ஈழத் தமிழர்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது மூன்றாவது. ஆனால் தமிழகம் கொந்தளிக்க முன் ஈழத்தமிழ் அரசியல் கொந்தளிக்க வேண்டும். இது நாலாவது.

அதாவது ஈழத் தமிழர்கள் தங்களுக்காக தாங்கள்தான் போராட வேண்டும். வேறு யாரும் தங்களுக்காகப் போராடுவார்கள் என்று காத்திருக்கக் கூடாது. இவ்வாறு வெளியாருக்காகக் காத்திருக்கின்ற அல்லது வெளிநாடுகளில் உள்ள தலைவர்கள் தங்களுக்கு தீர்வைப் பெற்றுத் வைத்துத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது.

அது அப்பாவித்தனமானது மட்டுமல்ல. அது ஓர் அரசியல் இயலாமை. தானே தனக்காகப் போராட முடியாத போதுதான் வெளியாருக்காகக் காத்திருத்தல் என்ற அரசியல் போக்கு மேல் எழுகிறது. தன்னைத் தானே நம்பும் ஒரு சமூகம் அதிசயங்கள் அற்புதங்களுக்காகக் காத்திருக்காது.வெளியாருக்காகவும் காத்திருக்காது. மாறாக தானே போராட்டங்களின் மூலம் அரசியலில் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்யும்.


யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதிய கட்டுரை